இலங்கையில் இரத்துச் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான கடன் அட்டைகள்- ஒரு மாதத்திற்குள் ஏற்பட்ட திடீர் மாற்றம்!
இலங்கையில் 2021 செப்டம்பர் மாதத்தில் பயன்படுத்தப்பட்ட 18 லட்சத்து 56 ஆயிரத்து 191 கடன் அட்டைகளின் எண்ணிக்கையானது நவம்பர் மாத இறுதியல் 18 லட்சத்து 94 ஆயிரத்து128 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் கடந்த ஒக்டோபர் மாதம் பயன்படுத்தப்பட்ட 62 ஆயிரம் கடன் அட்டைகளை வங்கிகள் இரத்துச் செய்துள்ளன. 62 ஆயிரம் கடன் அட்டைகளை இரத்துச் செய்த போதிலும் புதிய கடன் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதன் காரணமாகவே நவம்பர் மாதம் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே ஒரு மாத காலத்தில் 37 ஆயிரத்து 937 கடன் அட்டைகள் அதிகரித்துள்ளன. எவ்வாாறாயினும் இரத்துச் செய்யப்பட்ட 62 ஆயிரம் கடன் அட்டைகளில் 150 கடன் அட்டைகள் இலங்கையில் மாத்திரம் பயன்படுத்தக் கூடியவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய அனைத்து அட்டைகளும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பயன்படுத்தக் கூடியவை. ஒரு தொகை கடன் அட்டைகளை வங்கிகள் இரத்துச் செய்திருந்தாலும் 2021 ஒக்டோபர் இறுதி வரையான காலம் வரை கடன் அட்டைகளுக்கு செலுத்த வேண்டிய தொகை124.2 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது.
செலுத்த வேண்டிய இந்த தொகையானது கடந்த செப்டம்பர் மாதம் 121 பில்லியன் ரூபாயாக இருந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு இலங்கையில் பயன்படுத்தப்பட்ட கடன் அட்டைகளுக்கு செலுத்த வேண்டிய முழு தொகையானது 117 பில்லியன் ரூபாயாக இருந்தது.
கொரோனா தொற்று நோய் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கடன் அட்டைகளுக்கு செலுத்த வேண்டிய தொகை அசலுத்தப்படாமை மற்றும் இணையத்தளம் வழியாக செலுத்தும் முறை வரையறுக்கப்பட்டமை என்பன இவ்வாறு பெருந்தொகையான கடன் அட்டைகளை இரத்துச் செய்ய ஏதுவாக அமைந்தன என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.