உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு மக்களைப் பாதிக்கும்
--அதிபர் ரணில் கூறுகின்ற இத் தகவல்களுக்கும் இலங்கை மத்திய வங்கி மற்றும் தொடர்புடைய அமைச்சர்கள் அதிகாரிகள் வெளியிடுகின்ற தகவல்களுக்கம் இடையே வேறுபாடுகள் இருப்பதையும் அவதானிக்க முடிகிறது.
நாடாளுமன்ற நிதிக் குழு அறிக்கைகளிலும் தகவல் வேறுபாடுகள் தெரிகின்றன. எதிர்க்கட்சிகள் கூறுகின்ற தகவல்கள் அரசியல் நோக்கில் மேலும் மிகைப்படுத்தப்பட்டதாகவும் சில தகவல்கள் சரியானதாகவும் இருப்பதை அவதானிக்க முடியும். கடன் மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கண்டனத்தை வெளியிட்டாலும் மக்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்ற விபரங்களைத் தெளிவாகக் குறிப்பிடவில்லை.
வெறுமனே அரசியலுக்காக எதிர்ப்புத் வெளியிட்டாலும் இத் திட்டத்தின் மூலம் அரசாங்கத்துக்கு இருக்கும் உள் நாட்டுக் கடன்கள் மீளச் செலுத்தப்பட வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு எதிர்க்கட்சிகளிடம் இருப்பதையே காண முடிகின்றது--
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு
இலங்கைத்தீவில் 2009 இன் பின்னரான சூழலில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி 2022 இல் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டு தற்போது சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் அமெரிக்க இந்திய அரசுகளின் உதவிகள் மூலமும் ஓரளவு மூச்சுவிடக் கூடிய நிலையை எட்டியுள்ளது.
ஆனாலும், இலங்கையின் மொத்த உள்நாட்டுக் கடன் பதின் நான்கு ரில்லியன். இப் பின்னணியில் 2023 ஆம் ஆண்டில் இருந்து 2027 ஆம் ஆண்டுக்குள் சுமார் பதினேழு பில்லியன் டெலார் கடனை இரத்துச் செய்ய இலங்கை எதிர்பார்க்கிறது. இலங்கை ஐம்பத்து இரண்டு பில்லியன் டொலர் கடன்களை சர்வதேச மட்டத்தில் பெற்றிருக்கிறது.
அதேநேரம் இலங்கை மத்திய வங்கி, அரச மற்றும் தனியார் வங்கிகளிடம் இருந்தும் ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் காப்புறுதி நிறுவனங்களிடம் இருந்தும் பதின் நான்கு ரில்லியன் டொலர் கடன் பெற்றுள்ளது.
இந்த நிலையில் பதின் நான்கு ரில்லியன் டொலர் உள்நாட்டுக் கடன்களை மறுசீரமைக்கும் நோக்கில் சென்ற இருபத்து ஒன்பதாம் திகதியில் இருந்து அடுத்த ஐந்து நாட்களுக்கு இலங்கைத்தீவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
ஆளுநர் நந்தலால் வீரசிங்க
இக் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நிதிச் சந்தையில் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தலாம் என்று அஞ்சப்படுகிறது. ஆனால் அப்படி ஏதுவும் நிகழந்துவிடாதென அதிபர் ரணில் மக்களுக்கு நம்பிக்கையூட்டுகிறார்.
அமைச்சரவையில் கடன் மறுசீரமைப்புக்கான அனுமதி கிடைத்துள்ளதாகவும் ரணில் தெரிவித்திருக்கிறார். அதேநேரம் நாடாளுமன்ற நிதிக்குழுவிலும் இத் திட்டம் குறித்த யோசனைகளைச் சமர்ப்பித்து விவாதிக்கவுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க கூறுகிறார்.
ஆனால் வங்கிகளுக்கான விடுமுறையை அறிவித்துள்ள இலங்கை அரசாங்கத்தின் முடிவு, எதிர்காலத்தில் வங்கிகள் இயங்குவதற்குச் சிரமப்படலாம் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது' என்று ஒக்ஸ்போட் எக்னமிக்சின் (Oxford Economics) பொருளியல் நிபுணர் அலெக்ஸ் ஹோம்ஸ் (Alex Holmes) பிபிசி உலகச் செய்திச் சேவையிடம் தெரிவித்திருக்கிறார்.
அதேவேளை உள் நாட்டுக் கடன்களை மறுசீரமைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த குறிப்பிட்ட கால எல்லையொன்று தேவை எனவும் நாடாளுமன்ற விவாதத்தின் மூலம் இத் திட்டத்தை வெற்றிகொள்ள முடியுமெனவும் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை வெளியிட்டதாக டெயிலிமிரர் ஆங்கில ஊடகம் கூறுகிறது.
மக்கள் பணம்
கடன் மறுசீரமைப்புத் திட்டத்தின் ஊடாக வங்கிகளில் பணத்தை வைப்புச் செய்துள்ள மக்களுக்குப் பாதிப்பு இல்லை என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டுகிறார்.
வங்கிகளில் வைப்புச் செய்துள்ள மக்களின் பணத்திற்கு பாதிப்பு ஏற்படுமென பொருளியல் நிபுணர்கள் சிலரும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் வெளியிடும் கருத்துக்களை ஆளுநர் முற்றாக நிராகரிக்கிறார்.
உத்தேச உள்நாட்டு கடன் மறுசீரமைப்புத் திட்டத்தின் போது, உள்நாட்டு வங்கி மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் வைப்புச் செய்துள்ள பணம் அதற்காகக் கிடைக்கின்ற வட்டி வீதங்கள் போன்றவற்றிலும் பாதிப்புகள் அல்லது வட்டிக் குறைப்புகள் ஏற்படாது என்றும் ஆளுநர் உறுதியளிக்கிறார்.
ஆனால், அரச மற்றும் தனியார் ஊழியர் சங்கங்கள் உள்நாட்டுக் கடன் மறுசிரமைப்பு தொடர்பான தமது சந்தேகங்களை வெளியிட்டுள்ளன.
குறிப்பாக ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடனை, அரசாங்கம் திருப்பிச் செலுத்துமா என்று நிறுவன ஊழியர் சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசாங்கம்
லங்காதீப சிங்கள நாளேட்டிற்குக் கருத்து வெளியிட்ட அவர், ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட கடன்களை அரசாங்கம் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் அதற்கான உத்தரவாதத்தை உயர் நீதிமன்றத்தின் மூலமாக உறுதிப்படுத்தவுள்ளதாகவும் கூறியிருக்கிறார்.
அரசாங்கத்துக்கு உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு வலியுறுத்தி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அனைத்து நிறுவன ஊழியர் சங்கத்தின் தலைவர் என்ற முறையில் தன்னுடன் இணைந்து வேறு பல ஊழியர் சங்கங்களைச் சேர்ந்த ஆறுபேர் மனுத் தாக்கல் செய்துள்ளதாகவும் வசந்த சமரசிங்க கூறுகிறார்.
பொதுமக்கள் வைப்புச் செய்யும் பணத்தை திறைசேரி முறி, (Treasury) திறைசேரி உண்டியல் (Treasury) ஆகியவற்றில் அரசாங்கம் முதலீடு செய்வது வழமை.
அந்த முதலீட்டில் இருந்து கிடைக்கும் லாபத்தில் குறிப்பிட்ட லாபம் ஒன்றை திறைசேரி பெறும். அதில் ஒரு சிறிய பகுதியை வட்டி என்ற அடிப்படையில் பொதுமக்களுக்கு அரசாங்கம் வழங்கும்.
திறைசேரி வட்டி வீதம் முப்பது, முப்பத்து இரண்டு வீதமாகக் குறைவடைந்ததுள்ளது. குறிப்பாக வைப்பாளர்களுக்குக் கொடுத்த வட்டி வீதம் அண்மைக் காலமாக மிகக் குறைவடைந்து வருகிறது.
ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் ஆகியன திறைசேரி ஊடாகவே மத்திய வங்கி, அரசாங்கத்திற்கு கடன்வழங்கியுள்ளது.
இப்படி வழங்கப்பட்ட கடனில் ஒரு பகுதியை பதிவளிப்பு செய்யலாமா என்றே அரசாங்கம் எதிர்பார்ப்பதாகக் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை விரிரையாளர் எம்.கணேசமூர்த்தி பிபிசி செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் கூறுகிறார்.
கேள்வி
'நேரடியாகப் பார்க்கும் போது, பொதுமக்கள் வைப்புச் செய்த பணத்தில் ஒரு பகுதியை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என்ற ஒரு பார்வையும் இருக்கின்றது. அதேபோன்று, ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் ஆகியவற்றில் ஒரு பகுதியை இழக்க வேண்டி ஏற்படும் என்ற பார்வையும் உண்டு. வைப்புச் செய்தவர்களின் பணம் ஒருபோதும் எடுக்கப்படாது என அரசாங்கம் தெரிவிக்கின்றது.
ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் ஆகிய பணத்திற்கும் எந்தவித பாதிப்பும் வராது எனவும் அரசாங்கம் கூறுகின்றது' ஆகவே இந்த இரண்டிலும் கைவைக்காமல், அரசாங்கம் எப்படிக் கடன் மறுசீரமைப்பைச் செய்ய முடியும் என்று பார்த்தால், வங்கிகளில் செய்யப்படும் வைப்புக்களின் ஊடாக வருகின்ற இலாபத்தில் ஒரு பகுதியை அரசாங்கம் வெட்டி விடலாம்.
அதாவது ஒரு பகுதியைத் தருமாறு கேட்கலாம்.' என்று குறிப்பிட்டுள்ள அவர் உள்நாட்டு கடன் மறுசீரமைப்புத் திட்டத்திற்கு ஏன் நீண்ட விடுமுறை என்றும் கேள்வி எழுப்புகிறார்.
மக்களுக்கு என்ன பாதிப்பு
ஆகவே ஒக்ஸ்போட் எக்னமிக்சின் பொருளியல் நிபுணர் அலெக்ஸ் ஹோம்ஸ் மற்றும் கணேசமூர்த்தி ஆகியோரின் கருத்தின் பிரகாரம் பொதுமக்களின் அச்சத்தில் குறிப்பாக ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றில் உள்ள ஊழியர்களின் பணத்திற்கும் வட்டிவீதக் குறைப்புகளுக்கும் வாய்ப்பு உள்ளது என்பதை அறிய முடிகிறது.
கடன் மறுசீரமைப்பு மூலம் ரூபாவின் பெறுமதியைக் குறைத்து விட்டு ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றில் இருந்து பெறப்பட்ட கடன்களை, அரசாங்கம் இலங்கை மத்திய வங்கிக்கு மீளச் செலுத்தினாலும் அதனால் பயனில்லை என்ற கருத்துக்களும் உண்டு.
கடன் மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கண்டனத்தை வெளியிட்டாலும் மக்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்ற விபரங்களைத் தெளிவாகக் குறிப்பிடவில்லை.
வெறுமனே அரசியலுக்காக எதிர்ப்புத் வெளியிட்டாலும் இத் திட்டத்தின் மூலம் இலங்கை அரசாங்கத்துக்கு இருக்கும் உள் நாட்டுக் கடன்கள் மீளச் செலுத்தப்பட வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு எதிர்க்கட்சிகளிடம் இருப்பதையே காண முடிகின்றது.
கடன் மறுசீரமைப்புத் திட்டம்
ஜே.வி.பியைத் தவிர ஏனைய அனைத்துச் சிங்கள எதிர்க் கட்சிகளும் குறிப்பாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, கடன் மறுசீரமைப்புத் தொடர்பான மக்களின் அச்சத்தை விசேடமாக ஊழியர் சங்கங்களின் பயத்தைப் போக்குவதற்கு அல்லது அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதில் வழங்கக் கூடிய முறையில் பொருளியல் சார்ந்த கருத்துக்களை வெளியிடவில்லை.
பொருளியல் நிபுணரான நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா, இத் திட்டத்தை விமர்சித்தாலும் ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றில் இருக்கும் ஊழியர்களின் பணத்துக்கும் அதற்குரிய வட்டி வீதங்களுக்கும் என்ன நடக்கும் என்பதை விபரமாகக் கூறத் தயங்குகிறார்.
ஏனெனில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலோ அல்லது நாடாளுமன்றத் தேர்தலிலோ வெற்றி பெற்று ஆட்சியை அமைத்துவிட்டால், இக் கடன்களைத் தமது அரசாங்கம் சுமக்க நேரிடும் என்ற அச்சம் பிரதான எதிர்க் கட்சிகளிடம் தாராளமாக இருப்பதையும் அவதானிக்க முடிகிறது.
ஆகவே இப் பின்னணியில் நாடாளுமன்ற நிதிக்குழு விவாதத்தில் இக் கடன் மறுசீரமைப்புத் திட்டம் வெற்றி பெறும் சந்தர்ப்பங்கள் அதிகமாக உண்டு என்பதும் தொழிற் சங்கங்கள் எழுப்பும் சந்தேகங்கள் - கேள்விகள் நியாயமனவை எனவும் புரிகிறது.
வேறுபாடுகள்
2022 ஆம் ஆண்டின் இறுதியில், இலங்கையின் மொத்த அரச கடன் (உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு) எண்பத்து மூவாயித்து எழுநூறு மில்லியன் டொலர்களாகும்.
இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நூற்று இருபத்து எட்டுத் தசம் மூன்று விகிதம் என ரணில், சென்ற புதன்கிழமை கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கூட்டிக்காட்டி உரையாற்றியிருக்கிறார்.
ஆனால் ரணில் கூறுகின்ற இத் தகவல்களுக்கும் இலங்கை மத்திய வங்கி மற்றும் தொடர்புடைய அமைச்சர்கள் அதிகாரிகள் வெளியிடுகின்ற தகவல்களுக்கம் இடையே வேறுபாடுகள் இருப்பதையும் அவதானிக்க முடிகிறது. நாடாளுமன்ற நிதிக் குழு அறிக்கைகளிலும் தகவல் வேறுபாடுகள் தெரிகின்றன.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறுகின்ற தகவல்கள் அரசியல் நோக்கில் மேலும் மிகைப்படுத்தப்பட்டதாகவும் சில தகவல்கள் சரியானதாகவும் இருப்பதை அவதானிக்க முடியும்.
ஆனால், பாதிப்பும், பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பதும் சாதாரண மக்கள் என்பது மாத்திரம் நேரடியாகத் தெரியும் உண்மை.
