சர்வதேச நாணய நிதியத்திடம் கையேந்த முடிவு? சீனாவால் சிக்கல்நிலை
தற்போது எதிர்நோக்கியுள்ள நிதி நெருக்கடியைச் சமாளிக்க சிறிலங்கா அரசாங்கம் உள்ளகப் பேச்சுக்களில் ஈடுபட்டு வரும் நிலையில், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதியைப் பெற அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவரை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகங்கள் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளன.
அமைச்சரவையின் அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி உயர்நிலை அதிகாரிகளின் கடும் எதிர்ப்பினால் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதியைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது.
உடனடி நிதி நெருக்கடியைச் சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெருமளவு நிதியைப் பெற்றால், தற்போது சீன மேற்கொண்டுவரும் சில அபிவிருத்தித் திட்டங்களை இழக்க நேரிடுமென அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் சீன அரசிடம் இருந்து வேறு அழுத்தங்களை உருவாக்குமெனவும் சிரேஷ்ட அமைச்சர்கள் சிலர் கூறியுள்ளனர்.
எனினும், அந்த நிதிநெருக்கடிகளைச் சமாளித்து சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதியைப் பெறுவது தொடர்பாக எதிர்வரும் ஜனவரி மாதம் மூன்றாம் ஆம் திகதி, கூடவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன்னதாக மத்திய வங்கியின் உயர்நிலை அதிகாரிகளுடன் கலந்துரையாடி தீர்மானிக்கவுள்ளதாகவும் அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனவரி 3ஆம் திகதி கூடவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய வங்கி ஆளுநர், திறைசேரிச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.