சீனாவின் இராஜதந்திரம் - சர்வதேச நாணய நிதிய பேச்சிலும் கரிசனை
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும் வகையில் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் பேச்சுக்கள் தொடர்பில் சீனா தனது கரிசனையை வெளியிட்டுள்ளது.
இந்தப் பேச்சுக்கள், தமது நாட்டுடன் மேற்கொள்ளப்படும் கடனை பெறுவதற்கான பேச்சுக்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஸெங்கொங் ( Qi Zhen Kong ) கூறியுள்ளார்.
அத்துடன் நாடுகளை கடன் பொறிக்குள் சிக்க வைத்து தனது விடயங்களை சீனா சாதிக்கின்றது என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் வெறும் கட்டுக்கதை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை புரிந்துகொள்ளும் வகையிலான இலங்கையின் பேச்சுவார்த்தைகளை தமது நாடு உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக சீனத் தூதுவர் கி ஸெங்கொங் கூறியுள்ளார்.
இலங்கைக்கான சீனாவின் ஆதரவு என்பது குறிப்பிட்ட கட்சியையோ அரசாங்கத்தையோ அடிப்படையாக கொண்டது அல்லவெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் பொருளாதார வேலைத்திட்டத்தில் அதிகாரிகளுடன் நெருக்கமாகச் செயற்படுவதன் மூலம் தற்போதைய பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கான நாட்டின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க தயார் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ள நிலையில், சீனத் தூதுவரின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் சுமைக்கு வரலாற்றுக் காரணம் இருப்பதாகவும், ஒரே இரவில் அதனை தீர்க்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சீனாவின் கடன் பொறி இராஜதந்திரம் பற்றிய குற்றச்சாட்டுகள் குறித்தும் சீனத் தூதரிடம் ஊடகவியலாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர்.
"கடன் பொறி என்பது ஒரு கட்டுக்கதை மட்டுமே எனவும் இது சில வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகளால் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்படுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டில், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு குத்தகைக்கு விடுவதன் மூலம் டொலர்களை திரட்ட இலங்கை முடிவு செய்ததாகவும், சர்வதேச இறையாண்மை பத்திரங்களை திருப்பிச் செலுத்துவதற்கே அந்தப் பணத்தை பயன்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி - இலங்கையின் துறைமுகம் ஒன்றை கைப்பற்றிய சீனா! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அவுஸ்திரேலியா

