நாடு எரிமலைக்கு மேல் இருக்கின்றது அந்த எரிமலைக்கு மேல் நாம் டெனிஸ் விளையாடிக்கொண்டிருக்கின்றோம்!
இலங்கையில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் இதனை தீர்க்கும் முறை தொடர்பாக மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி தெளிவுப்படுத்துவதற்கு சிறிலங்கா அரச தலைவரோ பிரதமரோ நாடாளுமன்றத்தில் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
அதுமட்டுமன்றி இலங்கை தற்போது எரிமாலைக்கு மேல் இருப்பதாகவும் எரிமலைக்கு மேல் இருந்துகொண்டே நாம் டெனிஸ் விளையாடிக்கொண்டிருப்பதாகவும் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
இலங்கையில் இருக்கும் அரசாங்கம் தொடர்பில் சர்வதேசத்திற்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை. நாடாளுமன்றத்தில் நாம் தற்போது கூடி இருப்பது வழமையான நிலைமையில் அல்ல.
நாட்டில் எரிபொருள் இன்றி சுயமான ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலைமையில் நாடு இருக்கின்றது. இந்திய எண்ணெய் நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் கிலோ மீற்றர் கணக்கில் வாகனங்கள் வரிசையில் நிறுத்தப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர்களும் பயணம் ஒன்றை மேற்கொண்டால் எப்படி திரும்ப வருவது என்ற அச்சத்தில் உள்ளனர். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் இந்த நாடாளுமன்ற கூட்டம் நடக்கும் அவையில் பிரதமர் இல்லை.
எரிசக்தி அமைச்சர் இல்லை. நாங்கள் முன்பு கேட்ட கேள்விகளுக்கு பதிலளிப்பதை விட மக்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமைக்கு பதிலளிப்பது யார்? நாட்டில் அரச தலைவர் இருக்கின்றார். மக்களுக்கு அவர் தென்படுவதில்லை.
மக்கள் மிக மோசமான கஷ்டங்களுக்கு உள்ளாகியுள்ளனர். மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் எதுவும் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இல்லை. நாங்கள் எதிர்க்கட்சியில் இருக்கின்றோம் என்பதற்காக இந்த பிரச்சினை குறித்து மகிழ்ச்சியடைய மாட்டோம்.
கஷ்டத்தில் இருந்து மக்கள் மேலெழுந்து வருவதற்கான நடவடிக்கைகளை எடுக்க நாங்களும் எந்த நாட்டுடன் பேசலாம் என்று தனியாகவும் முயற்சித்து வருகின்றோம்.
நாட்டின் பிரச்சினை மேலும் உக்கிரமடைய இடமளிக்காது அனைத்து கட்சிகளும் இணைந்து சர்வக்கட்சி அசாங்கத்தை அமைக்க வேண்டும். நாடு எரிமலைக்கு மேல் இருக்கின்றது. எரிமலைக்கு மேல் இருந்துக்கொண்டு நாம் டெனிஸ் பந்து விளையாடிக்கொண்டிருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
