பதவி விலகிய ஆணைக்குழு உறுப்பினர் - தேர்தல் கடமைகளுக்கு தடையாகுமா?
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரின் பதவி விலகல் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு எவ்வித தடையாகவும் அமையாது என தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தனது முகப்புத்தக பதிவில் ''ஆணைக்குழுவின் செயல்பாடுகளுக்கு மூன்று உறுப்பினர்கள் போதுமானவர்கள் என்றும், ஒருவரின் பதவி விலகலால் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படாது.” என அரசியலமைப்பின் உறுப்புரைகளை மேற்கோள்காட்டி இதனை குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் ஆணைக்குழுவின் உறுப்பினரான பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தமது கடமைகளில் இருந்து விலகியதாக கூறப்பட்டது.
பெரும்பான்மை வாக்கு

குறித்த பதவி விலகல் கடிதம் சிறிலங்கா அதிபருக்கு கிடைத்துள்ளதாக அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
"தலைவர் இல்லாத நிலையில், அங்கிருந்த உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் ஒருவர் கூட்டத்திற்குத் தலைமை தாங்கலாம் . அவர்களின் பெரும்பான்மை வாக்குகளுக்கமைய தீர்மானம் நிறைவேறும்'' என மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார்.
அத்துடன், ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவி வெற்றிடமாக இருந்த போதிலும், ஆணைக்குழுவிற்குச் செயற்பட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று அரசியலமைப்பின் சரத்தை மேற்கோள் காட்டி அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.