மின்சார சபை ஊழியர்களுக்கு சிக்கல் - குறைக்கப்படவுள்ள ஊழியர் எண்ணிக்கை
இலங்கை மின்சார சபையின் ஊழியர்களின் எண்ணிக்கையை சுமார் நாற்பது வீதத்தால் குறைப்பது தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான சட்டமூலம் தற்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஏப்ரல் மாதம் அமைச்சரவையில் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்க மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சும் தயாராகி வருகின்றது.
2015 ஆம் ஆண்டளவில் இலங்கை மின்சார சபையின் ஊழியர்களின் எண்ணிக்கை 14,000 ஆகவும், 2023 ஆம் ஆண்டளவில் ஊழியர்களின் எண்ணிக்கை 22,400 ஆகவும் அதிகரித்துள்ளது.
40% பேர் சுகயீன விடுமுறை
கடந்த முதலாம் திகதி வேலைநிறுத்தம் இடம்பெற்ற போது, இலங்கை மின்சார சபையின் ஊழியர்களில் 40% பேர் சுகயீன விடுமுறையில் பணிக்கு வரவில்லை எனவும், 60% ஊழியர்கள் பணிக்கு வருகை தந்தனர் எனவும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் கடந்த முதலாம் திகதி நாட்டில் எங்கும் மின்வெட்டு ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி சுமார் 60% ஊழியர்களைக் கொண்டு இலங்கை மின்சார சபையின் பணிகளைப் பராமரிக்க முடியும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மறுசீரமைப்பு முன்மொழிவு
இது தொடர்பான பரிந்துரைகளையும் அமைச்சர் அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ளார்.
மின்சார உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகம் ஆகிய மூன்று துறைகளையும் உள்ளடக்கிய இலங்கை மின்சார சபையின் ஊழியர்களின் எண்ணிக்கையை 40% ஆல் குறைப்பது தொடர்பான மறுசீரமைப்பு முன்மொழிவுகளை அமைச்சரவையில் முன்வைப்பது குறித்தும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.