போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய முன்னாள் அரசியல்வாதிகள்: குற்றம் சாட்டும் எம்.பி
கடந்த கால அரசாங்கத்துடன் தொடர்புபட்ட முன்னாள் பிரதேசசபை உறுப்பினருக்கும் போதை போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்பு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் (Mylvaganam Jegatheeswaran) தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தப்பிச் சென்ற குற்றவாளிகளை சர்வதேச காவல்துறையினர் மற்றும் வெளிநாடுகளின் உதவியுடன் கைது செய்து எமது நாட்டிற்கு கொண்டுவந்து விசாரணை செய்ததன் மூலமாக போதைப்பொருள் உற்பத்தி நிலையங்களை கண்டுபிடித்துள்ளோம்.
சட்டவிரோத செயல்
இவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களிற்கு எதிராக சட்டத்துக்குட்பட்டு, நீதியான நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு காவல்துறையினர் மற்றும் புலனாய்வு துறையினருக்கு பூரண சுதந்திரத்தை வழங்கியதன் மூலமாக இவ்வாறானவர்களை தொடர்ச்சியாக கைதுசெய்து வருகின்றோம்.
அத்தோடு, குறித்த போதைப்பொருள் தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணையின் போது அரசியல்வாதிகளும், கடந்த காலத்திலே ஆட்சிபுரிந்த அரசியல்வாதிகளும் சம்பந்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
போதைப்பொருள்
இதேவேளை கடந்த கால அரசாங்கத்தினுடைய தொடர்புபட்ட முன்னாள் பிரதேசசபை உறுப்பினரும் தொடர்புபட்டதாக அறிய முடிகின்றது.
அந்தவகையில் கடந்த காலங்களிலே போதைப்பொருள் பாவனை இந்த நாடு முழுவதும் வியாபித்து இருந்தது மட்டுமல்லாது கடந்தகால அரசாங்கத்தினுடைய அனுசரணையுடனோ அல்லது குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளினுடைய ஒத்துழைப்போடு நடந்திருப்பதற்கான வாய்ப்பிருக்கின்றது.
இதேவேளை இளைஞர் யுவதிகள் தங்கள் வாழ்க்கையை தொலைத்துடன், எதிர்காலத்தை இழககும் நிலைக்கு இவ் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி இருந்தனர்.
கணிசமான அளவு
குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதிகளில் கணிசமான அளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததுடன் இது எதிர்கால சந்ததியினருக்கும் மற்றும் எதிர்கால இலங்கைக்கும் இருள் மயமான சூழலை ஏற்படுத்தியிருந்தது.
இந்தநிலையில் எமது அரசாங்கம் இது தொடர்பான விசாரணையினை முன்னெடுத்துள்ளோம்.
அந்தவகையிலே இதில் யார் ஈடுபட்டிருந்தாலும் அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி, அது யாராக இருந்தாலும் சரி, நாங்கள் கவலைப்படப்போவதில்லை என்பதோடு சரியான விசாரணை மற்றும் சாட்சியங்களோடு நிரூபிக்கப்படுபவர்களை நிச்சயமாக சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களிற்கான தண்டனையினை வழங்கி வைப்போம்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
