அனோஜனின் விடுதலை : இலங்கை அரசாங்கத்திடமிருந்து சவுதிக்கு சென்ற தகவல்
சவூதி அரேபியாவின் பொது வழக்குரைஞர் அலுவலகத்தினால், இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு முறையாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதை இலங்கை அரசாங்கம் வரவேற்றுள்ளது.
இதற்கு முன்னதாக, சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ஒக்டோபர் 13, 2026 அன்று ரத்து செய்து, வழக்கினை மேலதிக நடவடிக்கைகளுக்காக மீண்டும் விசாரணைக்கு அனுப்பியிருந்தது.
அனோஜனின் குடும்பத்தைச் சந்தித்த அமைச்சர் விஜித
அதன்பின்னர், பொது வழக்குரைஞர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, இந்த வழக்கு அதிகாரபூர்வமாக முடித்து வைக்கப்பட்டது. இதன் பொருள், அவருக்கு எதிராக முன்னதாக விதிக்கப்பட்டிருந்த அனைத்துத் தீர்ப்புகளும் இனி செல்லுபடியாகாது என்பதாகும்.

வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், நவம்பர் 11, 2026 அன்று சிவராசாவின் குடும்பத்தினரைச் சந்தித்து, வழக்கின் முடிவு குறித்தும், அவர் இலங்கை திரும்புவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் விளக்கமளித்தார். சவூதி அரேபிய அதிகாரிகளின் ஒத்துழைப்பிற்கு இலங்கை அரசாங்கம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.
இலங்கை அரசின் பாராட்டுதல்கள்
அதேவேளையில், ரியாத்திற்குச் சென்ற இலங்கை சட்ட நிபுணர்களின் பங்களிப்பையும், சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் இராஜதந்திர முயற்சிகளையும் இலங்கை அரசாங்கம் பாராட்டியது.

அனோஜன் விரைவில் நாடு திரும்புவதற்குத் தேவையான நிர்வாக நடைமுறைகளை நிறைவு செய்ய, வெளிநாட்டு விவகார அமைச்சு சவூதி அரேபிய அதிகாரிகளுடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயற்பட்டு வருகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |