இரட்டை நிலைப்பாட்டில் தலைவர்-சிறிலங்காவின் பிரதான கட்சி ஒன்றின் அனைத்து பதவிகளையும் துறக்கும் முக்கிய பிரமுகர்!
பிரபல சிங்கள திரைப்பட நடிகரும் முன்னாள் அமைச்சருமான ஜீவன் குமாரதுங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். நாட்டின் பஞ்ச மகா சக்திகள் வாழும் உரிமையை கோரி, வீதியில் போராடி வரும் வேளையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், கட்சியின் கொள்கைகளை மறந்து, இரட்டை நிலைப்பாட்டை கையாண்டு வருகிறார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன் காரணமாக தனது மனசாட்சிக்கு இணங்க தொடர்ந்தும் கட்சியில் இருக்க முடியாது என்பதால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் வகித்த அனைத்து பதவிகள் மற்றும் கட்சியின் அங்கத்துவத்தில் இருந்தும் விலக தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும், கெஸ்பேவ தொகுதியின் பிரதான அமைப்பாளருமான ஜீவன் குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
நான் சுமார் 35 ஆண்டுகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டு ரீதியான அரசியலில் ஈடுபட்டு வந்தேன். எனினும் இன்று மிக கவலைக்குரிய முடிவை எடுத்துள்ளேன். கட்சியில் வகித்து வந்த அனைத்து பதவிகளில் இருந்து விலகுவதாக கட்சியின் பொதுச் செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளேன்.
இந்த தீர்மானத்தை எடுக்க பல காரணங்கள் இருக்கின்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்களுக்கு தற்போது குமாரதுங்க பீதி காணப்படுகிறது. இதனால், அவர்களுக்கு எமக்கு பல தொந்தரவுகளை கொடுக்கின்றனர்.
நீண்டகாலமாக அவற்றை சிரமத்துடன் பொறுமையாக தாங்கிக்கொண்டிருந்தேன். முடியாத நிலையில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளேன் என ஜீவன் குமாரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.
ஜீவன் குமாரதுங்க, முன்னாள் அரச தலைவர்களான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோரின் அரசாங்கங்களில் முக்கிய அமைச்சு பதவிகளை வகித்துள்ளார்.
அத்துடன் அவர் சிங்கள திரைப்படத்துறையின் முன்னாள் சூப்பர் ஸ்டார் விஜய குமாரதுங்கவின் மகன் முறை உறவினராவார்.
ரஞ்சன் ராமநாயக்கவும் ஜீவன் குமாரதுங்கவின் உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
