"முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை" பகிரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி!
“கஞ்சி பரிமாறுவோம், முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்” என்ற தொனிப்பொருளில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தில் வலிந்து காணமால் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் பொது அமைப்புக்களும் இணைந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு கடந்த வருடம் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.
இந்த செயற்பாட்டின் தொடர்ச்சியாக இவ்வாண்டும் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளில் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணமால் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் அரசியல் பிரமுகர்கள் சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள் என பலரும் இணைந்து முள்ளிவாய்க்கால் பொதுச் சந்தை வளாகத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறினர்.
இன அழிப்பு வாரம் ஆரம்பம்
2009 ஆம் ஆண்டு இனவழிப்பு யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதில் இருந்து ஆண்டுதோறும் மே 12 முதல் 18 வரை தமிழினப்படுகொலை வாரம் தமிழ் மக்களால் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை யுத்தத்தில் தமிழ் மக்கள் உணவாக உட்கொண்ட உப்பில்லா கஞ்சியை இந்த வாரத்தில் அனைத்து மக்களுக்கும் வழங்கி முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் கதையை இளஞ்சந்ததியினருக்கு கடத்துவதோடு இனப்படுகொலைக்கு நீதி கோரும் அம்சமாகவும் இந்த கஞ்சி பரிமாறும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
பல அமைப்புக்கள் இணைந்து நடவடிக்கை
இந்த செயற்திட்டம் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவம் மற்றும் புலனாய்வாளர்களின் கெடுபிடிகளுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் மேற்கு பொது சந்தை அமைந்திருந்த பகுதியில் கஞ்சி வழங்கும் செயற்பாட்டை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அரசியல் பிரமுகர்கள் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் என பலரும் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.