கோட்டாபயவுக்கும் உரிமையுண்டு - தாக்கல் செய்யப்பட்டது மனு!
இலங்கையின் பிரஜையும், முன்னாள் முதற் குடிமகனுமான கோட்டாபய ராஜபக்சவுக்கு இலங்கையில் சுதந்திரமாக வசிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஓஷல ஹேரத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு வருவதற்கு, அவரது அடிப்படை உரிமையை உறுதிப்படுத்துமாறும் கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிவில் மற்றும் சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் என்பவரினால் இன்று இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
முன்னாள் அதிபர் கோட்டாபய நாட்டை விட்டு வெளியேறினாரா அல்லது சதி காரணமாக நாடு கடத்தப்பட்டாரா எனக் கண்டறியக் கோரி கடந்த ஜூலை 18ஆம் திகதி காவல்துறைமா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்ட போதும் தெளிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்தார்.
கோட்டாபய நாட்டை விட்டு வெளியேறினாரா? நாடு கடத்தப்பட்டாரா?
மேலும் புதிய அதிபர் நியமிக்கப்பட்டதன் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது போராட்டத்திலிருந்து விலகியுள்ளதாகவும், இது தொடர்பில் சந்தேகம் நிலவுவதாகவும் குறிப்பிட்டார்.
கோட்டாபய கடந்த ஜூன் மாதம் இடம்பெற்ற போராட்டத்தையடுத்து அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறி திருகோணமலை கடற்படை தளத்தில் பதுங்கியிருந்தார்.
பின்னர் அங்கிருந்து மாலைதீவுக்கு தப்பிச் சென்று, அங்கிருந்து சிங்கப்பூர் சென்று, தற்போது தாய்லாந்தில் பாதுகாப்புக் கோர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
