அரசாங்கத்திலிருந்து வெளியேறுமா பிரதான கட்சி? நிறைவேற்றப்பட்டது ஏகமனதான தீர்மானம்!
கோட்டாபய ராஜபக்ச, சிறிலங்கா சுதந்திரக் கட்சியினரை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தை நாளைய தினம் பிற்பகல் 4 மணிக்கு அரச தலைவர் செயலகத்தில் நடைபெறவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும் என அந்த கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் ஏகமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளனர்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் முகாமையாளர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடியில் எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன என முன்னாள் அரச தலைவர், கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் கேட்டுள்ளார். அப்போது சுதந்திரக் கட்சி உடனடியாக அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும் என தொகுதி அமைப்பாளர்களும் முகாமையாளர்களும் தெரிவித்துள்ளனர்.
எனினும் இது அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கான பொருத்தமான காலமல்ல என மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளதுடன் அவசியமான நேரத்தில் அரசாங்கத்தில் இருந்து சுதந்திரக் கட்சி விலகும் எனவும் தெரிவித்துள்ளார்.
