எரிபொருளை பெற வரலாறு காணாத நீண்டவரிசை - நடைமுறைக்கு வரவுள்ள திட்டம்
இலங்கையில் அதிகரித்துள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் இரவு பகலாக காத்திருக்கின்ற நிலையில், இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருளை விநியோகிக்க யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் போக்குவரத்து சங்கங்களுக்கிடையில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அகில இலங்கை போக்குவரத்து ஒன்றிணைந்த செயற்பாட்டு மத்திய நிலைய இணைப்பாளர் ஜே.இமாம்டின் முச்சக்கர வண்டிகளுக்கு நாளாந்தம் 8 லீற்றர் எரிபொருளை பெற்றுக்கொடுக்க இதன்போது இணக்கம் வெளியிடப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சட்டவிரோதமாக எரிபொருளை விநியோகித்த மூன்று எரிபொருள் தாங்கி ஊர்திகளின் அனுமதிப்பத்திரம் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனங்களினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் எரிபொருள் விநியோகிக்கப்பட்ட விதம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் காணொளிகள் தொடர்பில் உரிய விசாரணைகள் நிறைவடையும் வரை இந்தத் தீர்மானம் நடைமுறையில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


