காலி போராட்டக்காரர்களிடம் தமிழர் அரசியல் அபிலாசை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள வலியுறுத்தல்!
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு முன்னுரிமை கொடுத்தால் மட்டுமே காலிமுகத்திடல் போராட்ட தரப்புடன் ஒத்துழைத்து செயற்பட முடியும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று காலை, காலி முகத்திடல் போராட்ட இயக்கத்தினரால் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் என்ற முறையில் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளீர்கள் ஆனால் எமது கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
சிறிலங்காவின் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கி அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் பலவருடங்களாக சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு முதலிடம் வழங்காமல் விட்டால் தமிழ் முற்போக்கு கூட்டணி காலி முகத்திடல் போராட்ட இயக்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்காது எனவும் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாத சட்டம் நீக்கப்பட்டு அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்
மேலும் அரசியல் கைதிகள் விடுதலை என்ற கோஷத்தில் தமிழ் கைதிகளுக்கு முதலிடம் இருக்க வேண்டும், ஆட்கடத்தல், முறைதவறிய கைது, அவசரகால சட்டம், பயங்கரவாத தடை சட்டம் என்பன நீக்கல், அரசியல் கைதிகள் விடுதலை, மனித உரிமை பேணல், மக்களுக்கு நிவாரணம் ஆகியவற்றை நாம் ஏற்கிறோம்.
இவை எங்களதும் நீண்டகால கோரிக்கைகள் தான். பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கி அரசியல் கைதிகளை விடுவிப்பதில், 10, 15, 20 வருடங்களாக சிறையில் இருந்து, தம் வாழ்வையே இழந்து நிற்கும் தமிழ் அரசியல் கைதிகள் முதலிடம் பெறவேண்டும் என்பதை உறுதி செய்யுங்கள்.
இல்லாவிட்டால் எமது கட்சி உங்களுடன் ஒத்துழைக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.



