காலி முகத்திடல் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறைக்கு காரணம் இவரே - பசில் சமன் கடும் சொற்போர்!
இலங்கையில் கடந்த மே மாதம் 9 ஆம் திகதி காலி முகத்திடல் போராட்டக்கார்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு மொரட்டுவை மாநரக சபையின் முன்னாள் முதல்வர் சமன் லால் பெர்னாண்டோவே காரணம் என பொதுஜன பெரமுன குற்றம் சுமத்தியுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் மே தினம் குறித்து கலந்துரையாடுவதற்கான குழு கூட்டம் நேற்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றிருந்த நிலையிலேயே, கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இலங்கையில் கடந்த வருடம் முன்னெடுக்கப்பட்ட அரச எதிர்ப்பு போராட்டங்களின் போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை மொரட்டுவை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சமன் லால் பெர்னாண்டோ முன்னெடுத்ததாக பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.
காலி வன்முறை

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் உள்ளிட்ட சில தரப்பினர் இந்த நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டாம் என கூறிய போதிலும் இதனை பொருட்படுத்தாது சமன் லால் வன்முறையை தூண்டியதாகவும் இதனால் கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், சமன் லால் பெர்னாண்டோவின் பொறுப்பற்ற செயல்களால் மொரட்டுவையில் பொதுஜன பெரமுன தோல்வியடைந்தாகவும் பசில் ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.
இதேவேளை, கடந்த ஆண்டின் துணை முதல்வர் பதவிக்கான நபர்களை நியமிப்பதற்கான பெயர் பட்டியலை சமன் லால் முன்வைக்கவில்லை என்பதோடு ஆறு பேரை கட்சியில் இருந்து விரட்டியதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடும் வாக்குவாதம்

மேலும், சமன் லால் கட்சியில் இருந்து விலகியருந்தால் மொரட்டுவையில் பொதுஜன பெரமுன வெற்றி பெற்றிருக்கும் எனவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், பசில் ராஜபக்ச தம் மீது பொய் குற்றச்சாட்டை சுமத்தியிருப்பதாக சமன் லால் கூறியதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பசில் ராஜபக்ச சுமத்திய குற்றச்சாட்டுக்கள் காரணமாக பொதுஜன பெரமுனவில் இருந்து தாம் ஒருபோதும் விலகப் போவதில்லை எனவும் சமன் லால் மேலும் தெரிவித்துள்ளார்.