சுனாமி, போர் போலல்ல வங்குரோத்து!! இலங்கைக்கு எச்சரிக்கை
சுனாமியின் பின்னரோ அல்லது போரின் பின்னரோ நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுத்தது போன்று நாட்டில் வங்குரோத்து நிலைமை ஏற்பட்டால் மீட்டெடுக்கமுடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Patali Champika Ranawaka) எச்சரித்துள்ளார்.
கொழும்பில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற 43ஆவது படையணியின் மாநாட்டில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“பொருளாதாரத்தை சீர்ப்படுத்த அனைத்து நாடுகளுடன், குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளுடன் சமமான உறவைப்பேணுவதன் மூலம் முன்னேற்றம் காணமுடியும்.
வங்குரோத்து நிலையை அடையவிருந்த இலங்கையை இந்தியா வழங்கிய 500 மில்லியன் மற்றும் உறுதியளித்த ஆயிரத்து 400 மில்லியன் டொலர்கள் காப்பாற்றியது. இந்த நிலை தொடரக்கூடாது.
நாடு வங்குரோத்து நிலையை அடையும் போது, இந்தியாவிடமும், சீனாவிடமும் செல்லாது அதனை சமாளிக்கக்கூடிய மாற்றுக் கொள்கைகள் தயாரிக்கப்படவேண்டும்.
இதற்கான முன்னெடுப்புகள் நாடாளுமன்றத்தில் ஆரம்பித்து, பொதுமக்களது நேரடிப் பங்களிப்புடன் செயற்படுத்தப்படவேண்டும். தற்போதைய அசாதாரண சூழ்நிலையை வென்றெடுக்க, அசாதாரண தைரியத்துடன், அசாதாரண தீர்வு அவசியம்.
இலங்கை தற்போதைய நிலையில், வங்குரோத்து நிலைக்குச் சென்றால், நாட்டை கட்டியெழுப்ப 7 அல்லது 8 ஆண்டுகள் தேவைப்படும்.
குறிப்பாக, 2010ஆம் ஆண்டு கிரீஸ் அரசாங்கம் பொருளார வீழ்ச்சியை கண்டநிலையில், இன்னும் அவர்கள் மீளெழவில்லை” - என்றார்.
