போராட்டக்காரர்கள் மீதான அராஜகம் - உடனடி விசாரணைக்கு தயாராகும் மனித உரிமைகள் ஆணைக்குழு!
காலி முகத்திடலில் அமைதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது படையினரால், இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட மூர்க்கத்தனமான தாக்குதலை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் வன்மையாக கண்டித்துள்ளது.
இதேவேளை சட்டத்தின் ஆட்சி பேணப்படுவதை உறுதி செய்வதற்காக, தமது தரப்பில் சுயாதீனமாக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் மக்களின் அடிப்படை உரிமைகளை நிறைவேற்று தரப்பினர் முற்றிலும் மீறும் செயலாகும் என்று ஆணைக்குழு தமது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உடனடி நடவடிக்கைக்கு வலியுறுத்தல்
இந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு காவல்துறையினரை அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன் இராணுவத்தினரின் இத்தகைய செயற்பாடு அல்லது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையிலான செயல்கள் எதிர்காலத்தில் இடம்பெறமாட்டாதென்பதை சிறிலங்கா அரசாங்கம் உறுதி செய்யவேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை, இந்த தாக்குதலுக்கு சர்வதேச நாடுகள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட தரப்பினரும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.