அரச வேலைகளுக்காக காத்திருப்போருக்கு அதிர்ச்சி தகவல்..! அரசாங்கம் எடுத்த அதிரடி தீர்மானம்
தற்போது காணப்படுகின்ற பொருளாதார நிலைமையின் கீழ், அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதனால் சேவை யாப்பு மற்றும் ஆட்சேர்ப்பு நடவடிக்கை முறை ஏற்பாடுகளின் பிரகாரம் அங்கீகரிக்கப்பட்ட பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனுமதி வழங்கிய அமைச்சரவை
அத்துடன், அரச சேவையில் ஆட்சேர்ப்புகளுக்கான முன்னுரிமைகளை கண்டறிந்து காலக்கெடுவை பரிந்துரைக்கவும், தற்போது அரச சேவையில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு உரிய பரிந்துரைகளை வழங்கவும் குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அரச சேவையை மிகவும் வினைத்திறனாகவும், பயன்வாய்ந்ததாகவும் மேற்கொண்டு செல்வதற்காக மேற்கொள்ள வேண்டிய அத்தியாவசிய ஆட்சேர்ப்புக்கள் தொடர்பாக முன்னுரிமைகளை அடையாளங்கண்டு, பொருத்தமான பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கு, பிரதமரின் செயலாளர் தலைமையில் உத்தியோகத்தர் குழுவொன்றை நியமிப்பதற்காக அமைச்சரவை குறித்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக பிரதமர் இதற்கான யோசனையை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

