விடுதலைப்புலிகள் பாணியில் பணப்பரிமாற்ற வியாபாரத்தில் சிறிலங்கா அரசாங்கம்!
அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கும் அதிகாரத்திற்கு அமைய அரச தலைவர் தனது பதவிக் காலத்தில் பதவி வகிப்பது சரியா அல்லது தவறா என்பதை அறிய முடிந்தால், சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka) தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற 43 வது படைப் பிரிவு அமைப்பின் மாவட்ட கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
மழை வீழ்ச்சியின்மை போன்ற இயற்கையால் ஏற்படும் பாதிப்புகள் காரணமாகவே இதற்கு முன்னர் எமது நாட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வந்துள்ளது. எனினும் டொலர் இல்லாத காரணத்தினால் தற்போது மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.
டொலர் இல்லாததால் மின்சாரத்தை துண்டிக்கும் ஒரே அரசாங்கம் தற்போதைய அரசாங்கமே. நாடு தாங்கிக்கொள்ள முடியாத வட்டியின் கீழ் கடனை பெற்று பிரயோசனம் இல்லாத திட்டங்களில் முதலீடு செய்தமை, அந்த பணத்தை மோசடி செய்தமை காரணமாகவே தற்போதைய டொலர் தட்டுப்பாடு ஏற்ட்டுள்ளது.
டொலர் தட்டுப்பாட்டை நிர்வத்தி செய்வதற்காக 80 வீதமான மருந்துகள், பால் மா, உரம், எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றை இறக்குமதி செய்வதை அரசாங்கம் நிறுத்தியுள்ளது. நாட்டுக்கு தேவையில்லாத வகையில் விமானங்களை கொள்வனவு செய்ய பெறப்பட்ட கடனை கடந்த அரசாங்கம் செலுத்தியது.
இலங்கை பெற்ற கடன் காரணமாக அடுத்த சில தினங்களில் 200 கோடி டொலரை திரும்ப செலுத்த வேண்டியுள்ளது. பெற்ற கடனை திருப்பி செலுத்த அரசாங்கத்திடம் வேலைத்திட்டங்கள் இல்லை. அரசாங்கத்திடம் இருக்கும் ஒரே வேலைத்திட்டம் மோசடி செய்வது.
தற்போது மேற்கொள்ளப்படும் அவசர எரிபொருள் இறக்குமதியில் நிதி மோசடி நடக்கின்றது. எத்தனோல் தொழிற்சாலையை நிர்மாணிக்க மொனராகலை பிரதேசத்தில் 60 ஆயிரம் ஏக்கருக்கும் மேலான காடுகள் அழிக்கப்படுகின்றன.
விடுதலைப்புலிகள் நிதி கொடுக்கல், வாங்கல்களை மேற்கொள்ள முன்னெடுத்த முறையை கையாண்டு பணப் பரிமாற்ற வியாபாரத்தை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
புதிய அரசாங்கம் ஒன்று ஆட்சிக்கு வரும் வரை எந்த வெளிநாட்டு முதலீட்டாளர்களும் கொழும்பு துறைமுக நகரில் முதலீடுகளை செய்ய மாட்டார்கள். தலைவர்களுக்கு தேவையான வகையில் பணத்தை மோசடி செய்ய முடியாது என்ற அச்சம் காரணமாக தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ளாமல் இருக்கின்றது.
சட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டுமாயின் நாடாளுமன்றத்தில் மீண்டும் 21 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை கொண்டு வர வேண்டியது அவசியம்.
ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமாக நீதியை நிலை நாட்டவில்லை என்ற காரணத்தினால், எதிர்வரும் ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டு பத்திரம் முன்வைக்கப்படவுள்ளது.
இதனை காரணமாக கொண்டு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை நீக்கப்பட்டால், இலங்கைக்கு கிடைத்து வரும் டொலர் தொகையும் கிடைக்காமல் போகும் எனவும் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
