அதிபர் தேர்தல் : அரசாங்கத்தை ஆதரிக்க போவதில்லை என உதய கம்மன்பில உறுதி!
இலங்கையில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என பிவித்துரு ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது.
அதேநேரம், அதிபர் தேர்தலில் தான் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பான முடிவை இதுவரை மேற்கொள்ளவில்லை எனவும் கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தல்
இலங்கையின் அரசியலமைப்புக்கு அமைய எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 18 ஆம் திகதி முதல் அக்டோபர் மாதம் 18 ஆம் திகதிக்குள் அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், குறித்த தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் திட்டம்
தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க, கடந்த காலங்களில் இலங்கையில் நடைபெறவிருந்த தேர்தல்களை தனக்கு ஏற்ற விதத்தில் ஒத்திவைத்திருந்ததாக அவர் நினைவூட்டியுள்ளார்.
எனினும், இலங்கையின் வரலாற்றில் இதுவரை அதிபர் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டதில்லை எனவும் இதற்கமைய, இந்த ஆண்டு நடைபெற வேண்டிய அதிபர் தேர்தலும் உரிய நேரத்தில் நடைபெறுமெனவும் உதய கம்மன்பில கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |