பிரபலங்களுக்கு வலைவீச்சு- அனைத்து நடவடிக்கைகளுக்கும் திட்டம்!
அரசாங்கம் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த போவதாக தற்போது நாட்டுக்கு காட்டிக்கொண்டிருந்தாலும் இறுதியில் மாகாண சபைத் தேர்தலை நடத்த அனைத்து நடவடிக்கைகளையும் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.
ஏற்கனவே தேர்தல்கள் ஆணைக்குழு, அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் எதிர்வரும் 24 ஆம் திகதி ஆணைக்குழுவிற்கு சமூகமளிக்குமாறு அறிவித்துள்ளது. இதன் போது உள்ளூராட்சி சபைத் தேர்தல் பற்றி கலந்துரையாடப்படும் எனவும் ஆணைக்குழு கூறியிருந்தது.
இதனடிப்படையில், அரசாங்கம் ஆரம்பத்தில், உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த போவதாக, தேர்தல் ஆணைக்குழுவின் ஊடாக ஒரு சமிக்ஞையை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
எனினும் அரசாங்கத்தின் உண்மையான திட்டம் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது அல்ல எனவும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே திட்டம் எனவும் தற்போது தெரியவந்துள்ளது.
இதற்கான முன் நகர்வாக அரசாங்கம் மாகாண முதலமைச்சர் வேட்பாளர்களை தெரிவு செய்ய தற்போது பிரபலமான நபர்களை தேடி வருவதாக கூறப்படுகிறது.
