"Sir Fail" என கோட்டாபயவை விமர்சித்த ஹரின் மற்றும் மனுஷவுக்கு கோட்டாபயவின் கைகளாலேயே வழங்கப்பட்ட பதவிப்பிரமாணம்!
சிறிலங்கா அரச தலைவர் தோல்வியடைந்து விட்டார் என்ற பிரசாரத்தை ஆரம்பித்து முன்னெடுத்து வந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் இன்று அமைச்சர்களாக கோட்டாபய முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
"Sir Fail" அதாவது அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தோல்வியடைந்து விட்டார் என்ற பிரசாரம் நாடு முழுவதும் பரவ இவர்கள் இருவருவருமே காரணமாக இருந்தனர். நாடாளுமன்றத்தில் மாத்திரமல்லாது வெளியிலும் இதனை இவர்கள் பகிரங்கமாக கூறி வந்தனர்.
இவ்வாறான சூழ்நிலையில், ஹரின் பெர்னாண்டோ காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் மனுஷ நாணயக்கார தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சராகவும் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
எனினும் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையில், பிரதமராக பதவியேற்க சஜித் பிரேமதாச தயங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் பிரதமராக பதவியேற்பது தொடர்பாக சஜித் தரப்பினரால் கோட்டாபயவுக்கு நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்திக்குள் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதாகவும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் இணைந்து செயற்பட வேண்டும் என்ற கருத்துக்களை சிலர் முன்வைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சவாலான தருணத்தில் கட்சி பேதமின்றி நாட்டின் நலன் கருதி செயற்பட வேண்டும் என்ற காரணத்தின் அடிப்படையில் ஹரின் மற்றும் மனுஷ ஆகியோர் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டுள்ளதாக அவர்களுக்கு நெருக்கமான தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
அதேவேளை நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள தருணத்தில், விடுக்கப்பட்ட கோரிக்கை மற்றும் சவாலை ஏற்று ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்க முன்வந்ததாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
