ஆட்சி பீடமேற்றியவர்களையே எட்டி உதைத்த அரசாங்கம் - மனம் வருந்தும் தேரர்!
அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர ஆரம்பத்தில் இருந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களை மறந்து விட்டு, அரசாங்கத்தின் சிறிய தரப்பினருடன் தனியான பயணத்தை மேற்கொண்டு வருவதை காண முடிவதாக கண்டி கெட்டம்பே ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கொப்பட்டியாகொட சிறிவிமல தேரர் தெரிவித்துள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் ஆய்வுப் பிரிவினர் எழுதிய இஸ்லாம் அடிப்படைவாதத்திற்கு மத்தியில் இலங்கை தலைவிதி என்ற நூலை, முன்னணியின் கண்டி மாவட்ட அமைப்பாளர்கள் டி.எம். நந்தரத்ன மற்றும் டி.யூ. சேனரத்ன ஆகியோர் தேரரிடம் கையளித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டின் தற்போதைய அரச தலைவர் மற்றும் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச பாரிய அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்.
எனினும் நாட்டுக்கு உரிய சேவையை செய்ய அவருக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்பதையே காணக்கூடியதாக இருக்கின்றது. அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர ஆரம்பத்தில் இருந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களுக்கு உரிய இடம் கிடைக்கவில்லை.
பொய்யாக சத்தமிட்டுக் கொண்டிருந்த வெற்று நபர்களுக்கே இடம் கிடைத்துள்ளது. தற்போதைய அரசாங்கம், ஏறிய ஏணியை எட்டி உடைத்து விட்டு, தனியான பயணத்தை மேற்கொண்டு வருகிறது.
விமல் வீரவன்ச போன்றவர்கள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தவறுகளை சுட்டிக்காட்டி அரசாங்கத்தை சரியான வழிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பார்களே அன்றி, குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க மாட்டார்கள்.
பொய்யாக சத்தமிட்ட நபர்களுக்கு இடம் கிடைத்ததன் காரணமாகவே அரசாங்கம் சில பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளது. முஸ்லிம் அடிப்படைவாதம் எந்த நேரத்தில் எப்படி வெளியில் வரும் என்பது எமக்கு தெரியாது.
நாம் அனைவரும் மிகவும் கவனமாக வேலைகளை செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
