சர்வதேச நாணய நிதியத்தின் மரணபொறி - கொழும்பில் எதிர்ப்பு போராட்டம்..!
சர்வதேச நாணய நிதியத்திற்கு எதிராக கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
சர்வதேச நாணய நிதிய மரணபொறியை தோற்கடிப்போம் எனும் தொனிப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் போராட்ட இயக்கம் எனும் அமைப்பால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், தொழிற்சங்க உறுப்பினர்கள், முன்னிலை சோசலிசக் கட்சியினர் மற்றும் பொது மக்கள் உள்ளிட்ட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
கடனுதவியின் நிபந்தனைகள்
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான கடனுதவியின் நிபந்தனைகள் இலங்கைகையயும் மக்களையும் ஏலமிடும் வகையில் அமைந்திருப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றை விற்பனை செய்வதை நிறுத்து, நெருக்கடியின் சுமை மக்களுக்கு நிவாரணம் செல்வந்தர்களுக்கு போன்ற பல பதாதைகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர்.
இதேவேளை, பாதுகாப்பு கருதி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட பகுதியில் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்படிருந்தனர்.
எனினும், ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் எதிர்ப்பை அமைதியான முறையில் வெளிக்காட்டியதன் பின்னர், கொழும்பு கோட்டை தொடரரூந்து நிலையத்திலிருந்து கலைந்து சென்றுள்ளனர்.
இதன் போது கருத்து தெரிவித்த சுகாதார தொழிற்சங்க நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ்...
இலங்கை மக்களின் தலைகளில் புதியதொரு தேசிய பிரச்சனையை விதைக்க சிறிலங்கா அரசாங்கம் முயற்சிக்கிறது.
நகைச்சுவை கலைஞர் நதாஷாவை நாட்டின் தேசிய பிரச்சனையாக வெளிக்காட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிறிலங்கா அரசாங்கம் வாராந்தம் ஒவ்வொரு பிரச்சனைகளின் மூலம் நாட்டில் தற்போது இருக்கின்ற உண்மையான பிரச்சனைகளை மூடி மறைக்கின்றது.
இதனை தவிர்த்து சிறிலங்கா அரசாங்கத்தால் எதுவும் செய்ய முடியாது. சிறிலங்கா அரசாங்கத்தின் இவ்வாறான முயற்சிகளுக்கு மக்கள் ஏமாற மாட்டார்கள். இலங்கையில் மீண்டும் இனவாதத்தையும் மதவாதத்தையும் யாராலும் தூண்டிவிட முடியாது.
இலங்கையை எவராலும் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்ல முடியாது. இதனை தற்போதைய ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும். எனவும் தெரிவித்துள்ளார்.
