சட்டமாக்கப்படும் ஐ.எம்.எஃப் பரிந்துரைகள் - ரணிலின் அறிவிப்பு
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்த எதிர்பார்ப்பதாகவும் அதன் பின்னர் ஒப்பந்தத்தின் முக்கிய விடயங்கள் சட்டமாகக் கொண்டு வரப்படும் எனவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டமூலம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் ஊழல் ஒழிப்பு சட்டமூலம் ஆகிய மூன்று வரைவுகளும் ஜூன் மாதத்திற்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அதிபர் குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டம்
நிதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (02)நடைபெற்ற சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டம் தொடர்பில் பல்கலைக்கழகங்களின் பொருளாதாரப் பிரிவு விரிவுரையாளர்களை தெளிவுபடுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அதிபர் ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டம் தொடர்பில் அரசாங்க அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கும் கருத்துக்களைப் பெறுவதற்கும் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலிருந்தும் பொருளாதாரப் பிரிவின் சிறந்த மாணவர்கள் பத்து பேரை அனுப்புமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அறிவித்தார்.
இதில், தெரிவு செய்யப்படும் சில மாணவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அதிபர் தெரிவித்தார்.
கல்வி முறையை மாற்றியமைக்க வேண்டும்
இந்த நாட்டில் உற்பத்தி மற்றும் சேவைகள் தானியங்கி முறைமைக்குச் செல்ல வேண்டும் எனவும் இல்லையெனில் இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளுடன் போட்டியிட முடியாது எனவும் தெரிவித்த அதிபர் ரணில் விக்ரமசிங்க, இதற்காக கல்வி முறையை புதிதாக மாற்றியமைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், 18 ஆவது தடவையாக சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்வதற்கு தான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என அதிபர் வலியுறுத்தியுள்ளார்.
