நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் - விரைவில் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்வு..!
எதிர்காலத்தில் அரசாங்கம் பல பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“சுங்கத்தின் எதிர்பார்க்கப்படும் வருமான இலக்கை அடைவதற்கும் இந்த இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தும் நடவடிக்கை உதவும்.
வருமான இலக்கு
முதல் 03 மாதங்களுக்கு சுங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள வருமான இலக்கு 270 பில்லியன் ரூபாவாகும். ஆனால் அந்த காலகட்டத்தில் கிடைத்த வருமானம் எதிர்பார்த்த வருமானத்தை விட 12 சதவீதம் குறைவாகவே காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை 2021இல் 485 பொருட்களும் 2022 இல் 750 பொருட்களும் இறக்குமதி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுள்ளன.
இது தொடர்பான கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படும்.
மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் திணைக்களம் வழங்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் உரிய முடிவுகள் எடுக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.
