வேடிக்கை பார்க்க மாட்டோம் : அநுர அரசை எச்சரிக்கும் விமல் வீரவன்ச
தேசியத்துக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எம்மால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது நாட்டு மக்களுக்கு சகல விடயங்களையும் நாங்கள் வெளிப்படுத்துவோம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்,முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கண்டி அஸ்கிரிய பீடம்,மல்வத்து பீடம் ஆகியவற்றின் மகாநாயக்க தேரர்களை வெள்ளிக்கிழமை (12) சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
பழிவாங்கும் செயற்பாட்டில் அரசாங்கம்
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக்கொண்டே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்து 1 வருடம் நிறைவடையவுள்ள நிலையில்,பொருளாதார மீட்சிக்காக எவ்வித திட்டங்களும் இதுவரையில் செயற்படுத்தப்படவில்லை.
முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் அரசியல்வாதிகளை பழிவாங்குவை மாத்திரம் முன்னிலைப்படுத்தி அரசாங்கம் செயற்படுகிறது. முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை சட்டத்தின் ஊடாக அரசாங்கம் நீக்கியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகள் உத்தியோகபூர்வ அரச இல்லத்தில் இருந்து வெளியேறியுள்ளார்கள்.இந்த இல்லங்களை பராமரிக்கும் செலவு இனி மிகுதியாகும்.
பொருட்களின் விலையை அரசாங்கம் குறைக்குமா
இந்த நிதியை கொண்டு அத்தியாவசிய பொருட்களின் விலையை அரசாங்கம் குறைக்குமா அல்லது பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரமளிக்குமா, ஏதுமில்லை. வைராக்கியத்தை முன்னிலைப்படுத்தியே அரசாங்கம் இவ்வாறு செயற்பட்டுள்ளது.
ஆட்சியில் இருந்த அரசாங்கங்களும் இவ்வாறு பழிவாங்கவில்லை. எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டினால் அவர்களை ஏதாவதொரு வழியில் கைது செய்வதற்கு அரசாங்கம் பல வழிகளை தேடுகிறதுஎன்றார்.
You may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
