'அரசியல் முடிவுகளால்' நெருக்கடிக்குள் இலங்கை - அரசாங்கத்திற்கு ஆலோசனை
நிதிக் கொள்கை தொடர்பான தற்போதைய அரசாங்கத்தின் அரசியல் தீர்மானங்கள் மக்களின் வாழ்க்கையை மோசமாகப் பாதிக்கும் பல சம்பவங்களுக்கு வழிவகுத்துள்ளதாக வங்கித் துறையைச் சேர்ந்த தொழிற்சங்கம் ஒன்று குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த தீர்மானங்களினால் மின்சாரம், எரிசக்தி உள்ளிட்ட பல பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசின் இறக்குமதிக் கொள்கையும், ரூபாய் மதிப்பை செயற்கையாகப் பராமரிக்கும் முயற்சியும் இதற்கு முக்கியக் காரணம். இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில், இறக்குமதிகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்குப் பதிலாக, அவசர காலங்களில் சீரமைக்கப்படுவது, தற்போதைய அந்நியச் செலாவணி பற்றாக்குறை மற்றும் உள்ளூர் ரூபாய் பற்றாக்குறைக்கு கதவுகளைத் திறந்து விட்டுள்ளதாக, இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், அந்நியச் செலாவணி கையிருப்பை பராமரிக்கும் அரச வங்கிகளின் கையிருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், செயற்கையாக ரூபாய் மதிப்பை நிலைநிறுத்தும் முயற்சியில் பணம் அனுப்புதல் மற்றும் அந்நிய நேரடி முதலீடு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான சூழ்நிலையில், சர்ச்சைக்குரிய உரக் கப்பலுக்கான கடன் கடித விவகாரத்தால் மக்கள் வங்கி மோசமான பட்டியலில் நுழைந்ததோடு, அவசர காலங்களில் எண்ணெய் தாங்கிகளுக்கு செலுத்தப்படும் கொடுப்பனவுகளினால் இலங்கை வங்கியின் வெளிநாட்டு நாணய கையிருப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி நீண்ட கால பொருளாதார நெருக்கடியை உருவாக்குவதோடு மக்களின் வாழ்வில் அழுத்தத்தையும் ஏற்படுத்துவதாக தொழிற்சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு நியாயமான தீர்வு, சரியான திட்டமிடல், இறக்குமதிக்கு முன்னுரிமை, ரூபாயை நிலைப்படுத்தும் முயற்சிகளை உடனடியாக நிறுத்துதல் மற்றும் ஏற்கனவே உள்ள மற்றும் ஏற்கனவே நிலையான வங்கி அமைப்பின் நிதி ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைத்தல், ஆகிய விடயங்கள் செயற்படுத்தப்பட வேண்டுமென இலங்கை வங்கி ஊழியர் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
