நெருக்கடிக்குள் இலங்கை : அரசாங்கம் வெளியிட்ட தகவல்
நாட்டு மக்களுக்கு பிரச்சினை உள்ளமையை ஏற்றுக்கொள்கிறோம். டொலர் கையில் இருக்குமாயின் மக்களை வரிசையில் விட்டிருக்கமாட்டோம் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ (Johnston Fernando) தெரிவித்துள்ளார்.
கொழும்பு பாமன்கடை சந்தியில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் பாலத்தினை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அரவர், இது இன்று உலகத்தில் உள்ள பிரச்சனை. இதனை சகலரும் புரிந்து கொள்ள வேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“அரசாங்கத்தினை பொறுப்பேற்பதற்கு தாம் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் அவர்களுக்கு கிடைத்த ஐந்து வருட ஆட்சிக் காலத்தில் என்ன செய்தார்கள் என்பதை அவர் சொல்ல வேண்டும்.
நாட்டின் தேசிய பாதுகாப்பு, பொருளாதாரம், மத்திய வங்கி என்பனவற்றை அழித்தவர்களே இன்று அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துகிறார்கள்.
இது மிகவும் ஜனநாயகமிக்க அரசாங்கம். ஊடகங்கள் இன்று எந்தளவு தூரத்திற்கு அரசாங்கத்தின் மீது பழி போடுகின்றன என்பது யாவருக்கும் தெரியும். ஆனாலும் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படுகின்றது. ஜனநாயகம் பாதுகாக்கப்படுகின்றது.
நல்லாட்சி அரசாங்கத்தில் நாடாளுமன்றத்தில் ஊடகவியலாளர்களின் பெயர்களை கூறி தாக்குதல் நடத்தியதை இன்று அவர்கள் மறந்துவிட்டார்கள்.
மக்களை கொரோனாவிலிருந்து பாதுகாப்பதே அரசாங்கத்தின் முதன்மையான செயற்பாடு. அதனை அரசாங்கம் செய்துவருகின்றது.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை அரச தலைவர் மீளக் கட்டியெழுப்புவதாக உறுதி மொழி அளித்துள்ளார்.
கஸ்டமான நேரத்திலும் மக்களுக்கான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படும். இதனை எதிர் தரப்பினர் அரசியலாக்கப் பார்க்கிறார்கள்” என்றார்.
