தமிழரின் பூர்வீகத்தை சிதைக்கும் செயற்பாடுகளில் சிறிலங்கா அரசாங்கம் - இளைஞர்களுக்கு பகிரங்க அறைகூவல்!
நாட்டிலே ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் மாறிமாறி ஆட்சிக்கு வந்த சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்களின் நிலங்களை தொடர்ச்சியாக அபகரித்து, தமிழரின் பூர்வீகம் என்பதை சிதைக்கும் செய்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி ஆரம்பமான பேரணியில் கலந்து கொண்ட போதே ஐபிசி தமிழ் ஊடகத்திற்கு மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“இன்றைய தினம் சிறிலங்காவின் சுதந்திர தினத்தை தமிழர்களின் கரி நாளாக கடைப்பிடிப்பதற்கு முடிவெடுத்த பல்கலைக்கழக மாணவர்களின் இந்த செயற்பாட்டை நாம் வரவேற்கின்றோம்.
இளைஞர்கள் முன்னின்று செயற்பட வேண்டும்
இனிவரும் காலங்களில் கூட இளைஞர்கள் இது போன்ற உரிமைப் போராட்டங்களை முன்னின்று செயற்படுத்த வேண்டும். இந்த பேராட்டம் மட்டுமன்றி வரும் காலங்களிலும் இளைஞர்கள் தாமகவே முன் வந்து அரசியல் மாத்திரமன்றி அனைத்து செயற்பாடுகளிலும் முன்னின்று செயற்பட வேண்டும்.
அதற்கு நாம் அவர்களுக்கு பின்னால் எப்போதும் உறுதுணையாக நின்று செயற்படுவோம். இவ்வாறு இளைஞர்கள் முன்னின்று தங்களது கைகளிலே பொறுப்புக்களை எடுத்து செயற்படும் போது தான், எமது மண்ணில், எமது மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க கூடியதான ஒரு சூழலை நாம் வெகு விரைவில் பெறமுடியும்.
இளைஞர்களுக்கு அறைகூவல்
எமது சுதந்திரம் என்பது எமது இளைஞர்களின் கைகளிலே தான். அவர்கள் தங்களின் கைகளிலே பொறுப்புக்களை எடுத்து செயற்படும் போது தான் எமக்கான சுதந்திரம் மலரும்.
இச்சந்தர்ப்பத்தில் இளைஞர்களுக்கு நான் அறை கூவல் விடுக்கின்றேன், இளைஞர்களே எமது மக்களின் விடுதலையை, எமது சுதந்திரத்தை ஜனநாயகத்தை, மக்களின் காணி நிலங்களை எமக்காக உயிர் நீத்த தியாகிகளையும், அத்தனை தியாகிகளையும், நினைவு கூரும் வகையில் எமது இந்தப் போராட்டம் அமைய வேண்டும்.
உறுதுணையாக கூட்டமைப்பு
அத்துடன் எமது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உங்களோடு தோளோடு தோள் நின்று
உங்களின் அத்தனை செயற்பாடுகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கும் வகையில் உங்களோடு பயணிப்போம் என்பதை உறுதியாகத் தெரிவிக்கின்றேன்” எனவும் தெரிவித்துள்ளார்.
