சிறிலங்கா கடற்பரப்பிற்குள் அத்துமீறிய இந்திய கடற்தொழிலாளர்கள் - நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு!
சிறிலங்கா கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய கடற்தொழிலாளர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை சிறிலங்கா கடற்பரப்பிற்குள் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 15 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 பேரில் 14 பேரை எதிர் வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டதோடு, 14 வயது சிறுவனை சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க மன்னார் நீதவான் இன்று திங்கட்கிழமை மதியம் உத்தரவிட்டுள்ளார்.
அத்துமீறிய கடற்தொழிலாளர்கள்

சிறிலங்கா கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் சனிக்கிழமை இரவு 2 படகையும் அதில் இருந்த 15 இந்திய கடற்தொழிலாளர்களையும் கடற்படையினர் கைது செய்தனர்.
இவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதன் போது கடற்தொழிலாளர்கள் இருவருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்ட நிலையில் தலை மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக நேற்று மாலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஏனைய 13 இந்திய கடற்தொழிலாளர்கள் கடற்படையினரின் விசாரணைகளின் பின் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
திடீர் சுகயீனம்

கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் குறித்த கடற்தொழிலாளர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டனர். இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேரும் வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய நிலையில் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் குறித்த 15 இந்திய மீனவர்களையும் இன்று திங்கட்கிழமை மதியம் மன்னார் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தியதோடு, விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் 14 பேரையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதோடு,14 வயது சிறுவனை சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.


