எத்தகைய முரண்பாடுகள் இருந்தாலும் யாராலும் பிரிக்க முடியாது - இந்தியா மீதான சிறிலங்காவின் திடீர் கரிசனை!
சிறிலங்காவையும் இந்தியாவையும் எந்த பிரிவினராலும் பிரிக்க முடியாது என சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் பல நூற்றாண்டுகளாக தொடர்வதாகவும், எதிர் வரும் காலங்களிலும் அது வலுவாக தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் அலி சப்ரி, இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“சில விடயங்கள் தொடர்பில் ஏனையோர் நிபந்தனைகளை முன்வைத்த போதும், இந்தியா தனது ஆதரவை முக்கியமான கட்டத்தில் வழங்கியது.
இந்தியாவின் ஆதரவின்றி பிழைத்திருக்க முடியாது

சுதந்திரத்தின் பின்னர் நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்திருந்தது. இந்தியாவின் ஆதரவின்றி இலங்கை மக்கள் போராடி உயிர் பிழைத்திருக்க மாட்டார்கள்.
அதேவேளை இலங்கை இன்னும் ஆபத்துக்களில் இருந்து வெளிவரவில்லை. இந்தியாவின் ஆதரவுடன் கட்டமைப்புகள் மற்றும் பொறிமுறைகள் செயற்படுத்தப்படுவதால், நெருக்கடியை சமாளிக்க சிறிலங்காவலால் போராட முடியு.
மேலும் ஈராக், லிபியா மற்றும் வெனிசுலா போன்ற நாடுகளில் வளங்கள் ஏராளமாக இருந்த போதிலும், அவற்றின் கட்டமைப்பு வீழ்ச்சியடைந்ததால், அந்த நாடுகளால் மீண்டெழ முடியவில்லை.
பிராந்தியமாக முன்னேறுவதே நன்மை

எனவே நெருக்கடியான நிலைமை முழுவதிலும் இந்தியா வழங்கிய ஆதரவை பாராட்டியுள்ளார். இதேவேளை அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அது குடும்ப உறுப்பினர்களிடையே இது பொதுவானது எனவும், சிறிலங்காவிற்கும் இந்தியாவுக்கும் இடையில் யாரும் வர முடியாது.
இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் செழிப்பு இலங்கைக்கு நன்மை பயக்கும். எந்தவொரு நாடும் தனியாக அல்லாமல் பிராந்தியமாகவே முன்னேறுகின்றது.
இது வட அமெரிக்கா, மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் ஆசியான் பிராந்தியங்களின் வளர்ச்சி மூலம் தெளிவாகத் தெரிகிறது.
எனவே இந்தியாவின் அபிவிருத்தி இலங்கைக்கும் பிராந்தியத்திற்கும் நன்மை பயக்கும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்துள்ளார்.