ரணில் விடுத்த அழைப்பு - சிறிலங்காவிற்கு விரைந்த மார்ட்டின் சுன்கொங்!
அனைத்து நாடாளுமன்ற ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் சிறிலங்காவை வந்தடைந்துள்ளார்.
இரண்டு நாட்கள் உத்தியோக பூர்வ விஜயமாக அனைத்து நாடாளுமன்ற ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் மார்ட்டின் சுன்கொங் நாட்டை வந்தடைந்துள்ளார்.
டுபாயில் இருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே 652 என்ற விமானத்திலேயே அவர் நாட்டை வந்தடைந்தார்.
அவர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததும், நாடாளுமன்றத்தின் பிரதிக் குழுத் தலைவர் அங்கஜன் இராமநாதன் மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க ஆகியோர் வரவேற்றனர்.
ரணிலின் அழைப்பை ஏற்று விஜயம்
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த போது விடுத்த அழைப்பிற்கு அமைய அவரது இந்த விஜயம் அமைந்துள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தன ஆகியோரை சந்திக்கவுள்ளார்.
சஜித்தை சந்திக்கவுள்ள மார்ட்டின்
இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
