இலங்கை சிங்கள பௌத்த நாடு-வடக்கு, கிழக்கே பிரச்சினை - சரத்வீரசேகர முழக்கம்
இலங்கை சிங்கள பௌத்த நாடு,வடக்கு கிழக்கு மாகாணங்களே பிரச்சினைக்குரியதாக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.
மஹகர பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடு முழுவதும் பௌத்த சின்னங்கள்
இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதால் நாடு முழுவதும் பௌத்த சின்னங்கள் மற்றும் மரபுரிமைகள் காணப்படுகின்றன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் தொல்பொருள் மரபுரிமைகளை அடிப்படையாக கொண்டு எவ்வித முரண்பாடுகளும் தோற்றம் பெறவில்லை.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகளை அந்த மாகாணங்களின் அரசியல்வாதிகள் தமது அரசியல் தேவைக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அரசியல்வாதிகளின் அனுசரணையுடன் தொல்பொருள் மரபுரிமைகள் அழிக்கப்படுகின்றன.
கூட்டமைப்பினரின் கருத்துக்களை ஏற்க முடியாது
குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் அதிபர் ரணில் தலைமையில் கடந்த எட்டாம் திகதி இடம்பெற்ற சந்திப்பின் போது அதிபர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் குறிப்பிட்ட விடயம் பொய் என்பதை தொல்பொருள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுர மனதுங்க தெளிவுபடுத்தவில்லை.
குருந்தூர் மலையில் தமிழர்கள் விவசாயம் செய்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் குறிப்பிட்ட கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. குருந்தூர் மலையில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகள்,அடையாளப்படுத்தப்பட்ட நடுகை தூண்களை அகற்ற எவருக்கும் உரிமை இல்லை.
குருந்தூர் மலை விவகாரத்தில் தோற்றம் பெற்றுள்ள முரண்பாடுகளுக்கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண தயாராக உள்ளோம். அதனை விடுத்து பலவந்தமான முறையில் செயற்பட்டால் நாங்களும் அந்த வழியில் செல்ல நேரிடும் என தெரிவித்தார்.