வடமாகாண சுகாதார பணிமனையின் திட்டமிடாத செயற்பாட்டால் ஏற்படவுள்ள உயிரிழப்புகள்!
யாழ்ப்பாணத்தில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நோயாளர் காவு வண்டிகள் சேவைகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் நோயாளர்களை வைத்தியசாலைக்கு உரிய நேரத்திற்கு கொண்டு செல்ல முடியாத காரணத்தினால் உயிரிழப்புக்கள் ஏற்படும் அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வடமாகாண சுகாதர சேவைகள் திணைக்களத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நோயாளர் காவு வண்டிகளுக்கான எரிபொருள் இன்மையினால் அவசர சிகிச்சைகளுக்காக நோயாளர்களை அழைத்து செல்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.
நோயாளர் காவு வண்டிகள் முடங்கும் அபாயம்
நோயாளர் காவு வண்டிகளுக்கு சாதாரண டீசல் மற்றும் சுப்பர் டீசல் ஆகியனவே வழங்கப்படுகின்றன. தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறையினால் டீசல் மற்றும் சுப்பர் டீசலில் இயங்கும் நோயாளர் காவு வண்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனாலேயே யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரி, கோப்பாய், வேலணை, புங்குடுதீவு, மற்றும் அச்சுவேலி ஆகிய வைத்தியசாலைகளில் நோயாளர் காவு வண்டி எரிபொருள் இல்லாமையினால் முடங்கியுள்ளன.
வடமாகாண சுகாதார பணிமனையில் திட்டமிடப்படாத செயற்பாடுகள்
எரிபொருள் மீதமுள்ள நோயாளர் காவு வண்டிகள் மாத்திரமே இயங்கு நிலையில் காணப்படுகின்றது. வடமாகாணசுகாதார சேவைகள் பணிமனையில் திட்டமிடப்படாத செயற்பாடுகளே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
வடமாகாண சுகாதார சேவைகள் பணிமனை உரிய தவணையில் எரிபொருளுக்கான கட்டணங்களை செலுத்தாமையினால் சாதாரண டீசலை பயன்படுத்தும் நோயாளர் காவு வண்டிகள் மாத்திரமே தற்போது இயங்கும் நிலையில் காணப்படுகின்றன.
இதனால் நோயளர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. அவ்வாறான நிலையில் சுப்பர் டீசலில் இயங்கும் நோளாளர் காவு வண்டிகளையும் சாதாரண டீசலில் இயக்கும் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்து தொடர்பில் வடமாகாண சுகாதார சேவை பணிமனை அவதானம் செலுத்தி வருகின்றது.
டீசல் விநியோகம்
எனினும் நோயாளர் காவு வண்டிக்கான நிறுவனம் சாதாரண டீசலில் நோயாளர் காவு வண்டிகளை இயக்க அனுமதி வழங்கவில்லை. எதிர்வரும் 13 ஆம் திகதி சுப்பர் டீசல் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும் தற்போது நோயாளர் காவு வண்டிகளுக்கான எரிபொருட்களும் வழங்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர். கேதீஸ்வரனிடம் ஐ.பி.சி தமிழ் செய்தி பிரிவு தொடர்பு கொண்டு வினவியது.
இதற்கு பதிலளித்த அவர் யாழ். மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடி எரிபொருளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்வதாகத் தெரிவித்தள்ளார்.
