யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் தஞ்சம்!
மன்னார் கடற்பகுதி ஊடாக தமிழகம் இராமேஸ்வரம் பகுதிக்கு 18 பேர் அகதிகளாக சென்றுள்ளனர்.
இவர்கள் நேற்றைய தினம் வியாழக்கிழமை தமிழகத்தை சென்றடைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியின் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் நேற்று மதியம் மன்னார் பேசாலை பகுதியில் இருந்து கடல் வழியாக இராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ள சேராங்கோட்டை எனும் பகுதியை சென்றடைந்துள்ளனர்.
அதேவேளை மன்னாரை சேர்ந்த நான்கு மாத கர்ப்பிணி பெண் உள்ளிட்ட மூன்று குடும்பங்களை சேர்ந்த 13 பேர் நேற்று இரவு தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியை சென்றடைந்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாகவும், உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கான தட்டுப்பாடு காரணமாகவும் இலங்கையில் தம்மால் வாழ முடியாத நிலையிலேயே இந்தியாவிற்கு வந்துள்ளதாக விசாரணைகளின் போது அவர்கள் தெரிவித்துள்னர்.
நேற்றைய தினம் சென்ற 18 பேரையும் விசாரணைகளுக்கு உட்படுத்திய பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை மண்டபம் முகாமில் ஒப்படைத்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இலங்கையில் வாழ முடியவில்லை என கூறி கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி முதல் நேற்றைய தினம் வரையில் 60 பேர் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடல் வழியாக சென்று தஞ்சமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



