ஊடகவியலாளர் வீட்டின் மீதான தாக்குதல்- சர்ச்சைக்குள்ளான சரத் வீரசேகரவின் மகனின் முகநூல்ப் பதிவு!
இலங்கையில் பிரதான தொலைக்காட்சி செய்திகளில் தலைப்புச் செய்தியாக வெளியிடப்பட்ட சம்பவம் ஒன்றை சரத் வீரசேகரவின் மகன் கேலி செய்துள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பில் மக்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள உணர்வுகளை அவர் கேலி செய்துள்ளமை சம்பவத்தை அலட்சியமாக புறக்கணிக்கும் செயல் என பல தரப்பினர் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் வீட்டின் மீது நடத்தப்பட்ட கல் மற்று மல கழிவு வீச்சு தாக்குதலை கேலி செய்யும் வகையில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் மகன் தனது முகநூலில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
“கற்கள் மற்றும் மல கழிவுகளை அவமதித்தவர்களை கண்டிப்போம்” என சிங்களத்தில் அவர் இந்த பதிவை இட்டுள்ளார். அமைச்சர் வீரசேகரவின் மகன் சசித்திர வீரசேகர, காவல்துறை திணைக்களத்தில் ஒரு மருத்துவராக கடமையாற்றி வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அதனுடன் தொடர்புடைய குற்றவாளிகளை சட்டத்திற்கு முன் நிறுத்துமாறு காவல்துறையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலைமையில், காவல்துறை திணைக்களத்தின் மருத்துவ காவல்துறை அதிகாரியான சசித்திர வீரசேகர இவ்வாறான பதிவை இட்டுள்ளமை விசனத்திற்குரியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமுதித்த சமரவிக்ரம, சமூக ஊடகங்கள் மூலம் வெளியிட்ட ஊழல், மோசடிகள் மற்றும் ஏனைய பிரச்சினைகள் சம்பந்தமான நேர்காணல் ஒளிப்பரப்புகள் , பிலியந்தலையில் உள்ள அவரது வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காரணம் என ஊகிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் அமைச்சர் வீரசேகரவின் மகன், தனது முகநூல் பதிவை தற்போது நீக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

