பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் - மீண்டும் விசாரணை!
பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் குறித்து ஒன்பது இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் 17 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தார்.
அதனையடுத்து சம்பவம் தொடர்பில் ஒன்பது இராணுவ புலனாய்வு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
விளக்கமறியல்
இந்நிலையில், கடந்த 3 ஆம் திகதி கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது சந்தேக நபர்களை இன்று வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
அதற்கமைய ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மூவர் அடங்கிய அமர்வு
நீதிபதிகள் சஞ்சீவ மொராயஸ், மஹேன் வீரமன் மற்றும் தமித் தொட்டவத்த ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட 2010 ஆம் ஆண்டு அரச தலைவர் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் அதாவது ஜனவரி 24 ஆம் திகதி காணாமல் போயிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
