ஜே.வி.பியின் வாக்கு வீதத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!
மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான கூட்டணியின் வாக்கு வீதம் 3 வீதத்தில் இருந்து சுமார் 80 வீதமாக அதிகரித்துள்ளது என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
வலையொளி தளத்திற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது எந்த வகையிலும் மிகைப்படுத்திய மதிப்பீடு அல்ல. 2024 ஆம் ஆண்டில் கட்டாயம் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர மக்கள் அணித்திரண்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
நிறைவேற்று அதிகாரத்துடன் கூடிய மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் 69 லட்சம் வாக்குகளை பெற்றுக்கொண்ட அரசாங்கத்தினால், மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முடியாமல் போயுள்ளது.
மக்களுக்கு வாழ்வது தொடர்பான பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அரிசி, சீனி என அத்தியவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. டொலர் இல்லை. எரிபொருள் இல்லை. மின்சாரம் இல்லை. இவையே மக்களின் பிரச்சினை.
இந்த பிரச்சினைகளுக்கு எதிராக மக்கள் அணித்திரளும் போது, அரசாங்கத்திற்கு ஆத்திரம் ஏற்படுகிறது. அவன்கார்ட் நிறுவனத்தின் உரிமையாளரிடம் மக்கள் விடுதலை முன்னணி நிதியை பெற்றுக்கொண்டதும் இல்லை. பெறப் போவதுமில்லை.
நிஷ்சங்க சேனாதிபதி போன்ற மோசடியான வர்த்தகர்களுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி செயற்பட்டு வருகிறது எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
