பொறுப்புக் கூறலில் இருந்து விலக முடியாது - சஜித் விடாப்படி
ஸ்ரீலங்காவில் இதுவரை பதிவாகியுள்ள அதிகமான கொரோனா நோயாளிகளின் மரணத்துக்கு தற்போதைய கோட்டாபய - மஹிந்த தலைமையிலான அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டுமென, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
இந்தப் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்ளுவதற்கான எந்தவொரு உரிமையும் அரசாங்கத்திற்கு இல்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நெருக்கடி நிலைமைகள் குறித்து சஜித் பிரேமதாச அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், வைரஸுடன் போராட வேண்டியது விஞ்ஞான ரீதியாகவே அன்றி தன்னிச்சையான அரசியல் ரீதியாகவும், மாயைகளை அடிப்படையாகக் கொண்ட மூட நம்பிக்கை மூலமும் அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிந்தித்து செயலாற்றும் எந்தவொருவரும் அதிர்ச்சிக்குள்ளாகும் அளவுக்கு எமது நாடு சீர்குலைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் அறிக்கையிடப்பட்ட மரணங்களின் எண்ணிக்கையை மாத்திரம் கணக்கில் எடுத்துக் கொண்டாலும் நாடு என்ற வகையில் ஸ்ரீலங்கா பின்தள்ளப்பட்டுள்ள இடம் பயங்கரமானது, இருள்மிக்கது என அவர் கூறியுள்ளார்.
முன்மாதிரி நிலையிலுள்ள எவரும் இந்த நிலைமையை சிறந்ததென கருதமாட்டார்கள் எனவும், அரசாங்கம் அது பற்றி எந்தவித கவனமும் எடுத்துக் கொள்ளவில்லை என்பது மாத்திரம் உறுதி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை ஏற்பட்ட அதிகமான கொரோனா நோயாளிகளின் மரணத்திற்கு அரசாங்கம் பொறுப்புக் கூறவேண்டும் என்பதோடு இந்தப் பொறுப்பில் இருந்து அரசாங்கம் விலகிக் கொள்ளுவதற்கான எந்தவொரு உரிமையும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
முதலாவது மற்றும் இரண்டாவது கொரோனா நோயாளிகள் இந்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டபோது எடுத்த நடவடிக்கைகளையாவது தற்போது பல்லாயிரக்காணக்கான கொரோனா நோயாளர்கள் காணப்படும் போது எடுக்கவில்லை என்பது கவலையான விடயமென சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.