லிட்ரோ எரிவாயு தொடர்பில் நிறுவனத் தலைவர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
சந்தைக்கான சமையல் எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், இன்று முதல் விநியோகம் வழமைக்கு கொண்டுவரப்படுவதாகவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
டொலர் நெருக்கடி காரணமாக எரிவாயு இறக்குமதிக்கு நாணயக் கடிதங்களை வழங்குவதனை கடந்த வாரம் வங்கிகள் தற்காலிகமாக நிறுத்தியதை அடுத்து எரிவாயு விநியோகத்தில் சிக்கல் நிலை தோன்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே சந்தையில் நிலவும் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு, எதிர்வரும் சில தினங்களுக்குள் தீர்வு கிடைக்கும் என்று லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பிரதிபலனாக, எரிவாயுவை விடுப்பதற்கான நாணயக் கடிதங்களை வழங்க அரச வங்கிகள் நேற்றிரவு இணங்கியுள்ளன.
இதன்படி, தற்போது நாட்டை வந்தடைந்துள்ள இரண்டு கப்பல்களில் உள்ள எரிவாயுவை தரையிறக்கும் பணிகளை ஆரம்பிப்பதுடன், நாளொன்றுக்கு, 80, 000எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விடுவிக்கவும் லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.
எவ்வாறிருப்பினும், டொலர் பற்றாக்குறை காரணமாக, நாணயக் கடிதங்களை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தினால், லாஃப்ஸ் நிறுவனம் தமது விநியோக நடவடிக்கைகளை தொடர்ந்தும் இடைநிறுத்தியுள்ளது.
