கோட்டாபயவுக்கு எதிராகத் திரும்பிய முன்னாள் அமைச்சர்கள்!
அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக பதவி வகித்த 16 பேர் தற்போது அந்த பதவிகளை இழந்துள்ளதுடன் இவர்களில் பெரும்பாலானவர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
இவ்வாறு அதிருப்தியில் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் சிலர், முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில் ஆகியோரை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.
இவர்களை சந்தித்துள்ள முன்னாள் அமைச்சர்கள் தாம் எதிர்நோக்கி இருக்கும் சிரமமான நிலைமை பற்றி கூறியுள்ளனர். இவர்களில் சிலர் அரச தலைவருக்கு எதிராக குற்றச்சாட்டு பிரேரணை கொண்டு வரப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் கடந்த மார்ச் மாதம் அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர். இவர்கள் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட பின்னரே அரசாங்கத்திற்குள் அரசியல் எரிமலை தீப்பிளம்பைக் கக்கத் தொடங்கியது.
இதனையடுத்து ஏப்ரல் மாதம் ஆரம்பத்தில் அரசாங்கத்தின் அமைச்சரவையில் அங்கம் வகித்த அனைத்து அமைச்சர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்தனர். இதனையடுத்து சில மூத்த உறுப்பினர்கள் உட்பட இளம் அரசியல்வாதிகள் அடங்கிய புதிய அமைச்சரவையை அரச தலைவர் நியமித்தார்.
ஏற்கனவே அமைச்சு பதவிகளில் இருந்து விலகியவர்கள் சிலர் மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றனர். இது சம்பந்தமாக முன்னதாக அமைச்சு பதவிகளில் இருந்து விலகியவர்களில் எஸ்.எம்.சந்திரசேன, ஏற்கனவே தனது அதிருப்தியை அரசாங்கத்திடம் வெளியிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ள போவதில்லை என ஏற்படுத்திக்கொண்ட பொது இணக்கம் மீறப்பட்டமையே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
பொது இணக்கத்தை மீறி மீண்டும் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட பிரசன்ன ரணதுங்க மற்றும் ரமேஷ் பத்திரன ஆகியோரை எஸ்.எம்.சந்திரசேன மறைமுகமாக சாடியுள்ளதாக கூறப்படுகிறது.
