தமிழர் தாயகப் பகுதியில் மீண்டும் சிறிலங்கா இராணுவத்தின் அடாவடி - இந்து ஆலய வழிபாட்டிற்குத் தடை!
முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க வட்டுவாகல் சப்த கன்னிமார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் தீர்த்த திருவிழாவிற்கு இராணுவத்தினர் தடை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை 5.30 மணி அளவில் ஆலயத்திலிருந்து தீர்த்தம் எடுப்பதற்காக முல்லைதீவு பெருங்கடலை நோக்கி பக்தர்கள் சென்ற போது தீர்த்தம் எடுப்பதற்காக தீர்த்தக்கரை செல்லும் வீதியை மறித்து 591 ஆவது படைப்பிரிவின் 12 S L L I படைப்பிரிவு இராணுவத்தினர் தீர்த்தம் எடுப்பதை தடை செய்துள்ளனர்.
இரவு 9.30 மணி வரை குறித்த வீதி ஊடாக இராணுவத்தினர் தீர்த்தம் எடுக்க செல்ல விடாததன் காரணமாக குழப்ப நிலை ஏற்பட்டது. அவர்கள் தீர்த்தம் எடுக்க சம்மதிக்காத நிலையிலே மக்கள் அந்த இடத்தில் ஒன்று கூடியுள்ளனர்.
மக்கள் வீதிமறியல் போராட்டம்
அதனையடுத்து சப்த கன்னிமார் ஆலயத்திற்கு சொந்தமான காணியை அபகரித்து வீதி தடை ஏற்படுத்தியிருந்த இராணுவத்தினரை, ஆலய கடமைகளுக்கு ஒத்துழைக்காத காரணத்தினால் வெளியேறுமாறு மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்கள் வீதிக்கிறாங்கி போராட முற்பட்ட வேளையிலே சுமார் 50-க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் ஆயுதம் தாங்கிய நிலையில் குறித்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அதன் காரணமாக அந்த இடத்தில் சில மணி நேரமாக பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தது.
தங்களுடைய ஆலய கடமைக்கு ஒத்துழைக்காத இராணுவம் ஆலய காணியில் இருந்து வெளியேற வேண்டும் என்ற மக்களுடைய தொடர்ச்சியான கோரிக்கையை அடுத்து, ஆலய காணியில் இருந்து இராணுவத்தினர் தங்களுடைய பொருட்களை அகற்றி குறித்த இடத்திலிருந்து வெளியேறுவதாக உறுதி அளித்து வெளியேறினர்.
ஆயுதங்களுடன் களமிறக்கப்பட்ட படையினர்
அப்பகுதி இராணுவத்திடமிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், உடனடியாகவே மக்கள் அப்பகுதியை எல்லைப்படுத்தி வேலியடைத்திருந்தனர்.
அத்தோடு குறித்த காணி சப்த கன்னிமார் ஆலயத்துக்குரிய காணி என பெயர் பலகை ஒன்றையும் நாட்டியிருந்தனர். அதனையடுத்து அப்பகுதிக்கு முல்லைத்தீவு மாவட்ட காவல்துறை பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலர் சென்று சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வேலி அடைக்கும் பணிகளை நிறுத்தக் கோரியுள்ளனர்.
அதன் போது, தங்களுடைய காணி என மக்கள் தெரிவித்து, தாங்கள் வேலி அடைப்போம் எனவும், ஆலய தீர்த்தம் எடுக்க விடாத இராணுவத்தினரை எமது ஆலய காணியில் இருக்க விடமாட்டோம் என உறுதியாக தெரிவித்து தமது பணிகளை தொடர்ந்தும் முன்னெடுத்திருந்தனர்.
ஆலய வளாகம் ஆக்கிரமிப்பு
அதயைடுத்து, இன்று அதிகாலை 1 மணியளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஏற்கனவே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக வட்டுவாகல் பகுதியிலுள்ள நந்திக்கடல் களப்பை அண்மித்த பகுதியில் இராணுவத்தினர் அமைத்திருந்த இராணுவ முகாமில் இந்த திருவிழாவினுடைய இறுதி நாளில் பரியழம் வழி விடுகின்ற ஒரு சம்பிரதாய நிகழ்வு நடத்துகின்ற ஒரு பகுதியும் இராணுவ முகாமிற்குள் உள்வாங்கப்பட்டு அடைக்கப்பட்டிருக்கின்றது.
அவர்கள் பாரியதொரு பௌத்த விகாரையும் அந்த பகுதியில் அமைத்திருக்கின்றார்கள். அந்த விகாரை அமைந்திருக்கின்ற வளாகத்திலேயே பரியழம் வழி விடுகின்ற இடம் இருக்கின்ற காரணத்தினால் இராணுவத்தினருடன் மக்கள் கலந்துரையாடி ஆலய நிதியிலிருந்து ஒரு தொகை நிதியை கொடுத்து அந்த பரியழம் வழி விடுகின்ற இடத்திற்கு சென்று வருவதற்காக அங்கு தூண்கள் நட்டு கதவு போடப்பட்டு அதற்கான சாவி ஆலய நிர்வாகத்திடம் இராணுவத்தினரால் கொடுக்கப்பட்டிருந்தது.
தூண்களை இடித்து வீழ்த்திய இராணுவம்
நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவங்களின் பின்னணியில் இன்று அதிகாலை அந்த இடத்திற்கு மக்கள் சென்ற போது அந்த இடத்தில் போடப்பட்டு இருந்த தூண்கள் மற்றும் கதவு என்பன முற்று முழுதாக இடித்து அகற்றப்பட்டு தூண்கள் போடப்பட்டு முள்ளு கம்பி வேலி அடைக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த திருவிழாவினுடைய இறுதி நாளான வருகிற திங்கட்கிழமை அந்த நிகழ்வினை செய்ய முடியாத அளவிற்கு இராணுவம் மீண்டும் தடைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.
குறிப்பாக இந்த தீர்த்தக்கரை வீதி மற்றும் நந்திக்கடல் கரை பரியழம் வழி விடுகின்ற இடம் போன்றவை 591 ஆவது படைப்பிரிவின் 12 S L L I படைப்பிரிவு இராணுவ முகாமுக்குள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றதால் இந்த பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
அன்றாட தொழிலில் பாதிப்பு
மீன்பிடி நடவடிக்கைக்கு செல்ல முடியாத அளவு களப்பு வரை வேலி அமைத்திருக்கின்றார்கள். வீதியை மூடி தொழிலாளர்கள் கடல்தொழிலில் ஈடுபட முடியாத துர்ப்பாக்கிய நிலையை ஏற்படுத்தியிருக்கின்றார்கள்.
அதுமட்டுமன்றி ஆலய சம்பிரதாய நிகழ்வுக்கு தடைவிதித்து அந்த பகுதியிலே பாரிய புத்த விகாரையை அமைத்திருக்கின்றார்கள். இவற்றை அகற்றுமாறு மக்கள் பலகாலமாக கோருகின்ற போதும் எந்த விதத்திலும் முன்னேற்றமான நிகழ்வுகள் இடம் பெறாத நிலை காணப்படுகின்றது.
குறிப்பாக இந்த வீதி தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்யப்பட்டு இரண்டு தடவைகள் அவர்கள் இந்த இடத்திற்கு விஜயம் செய்து நிலைமைகளை பார்த்த போதும் இன்று வரை அதற்கான தீர்வு எட்டப்படவில்லை.
இராணுவத்தினர் அகற்றப்பட வேண்டும்
இவ்வாறான பின்னணியில் இராணுவத்தினர் ஏட்டிக்கு போட்டியாக மக்களின் ஆலய செயற்பாடுகளுக்கு தடை போடுவது தமது மத வழிபாட்டு உரிமைகளை மீறுகின்ற செயற்பாடு எனவும் இதற்கு எதிராக பாரியளவில் போராட எதிர்பார்ப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பாக இன்று மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதம் மூலம் அறிவிக்க உள்ளதாகவும் இரண்டு அல்லது மூன்று தினங்களுக்குள் மாவட்ட அரசாங்க அதிபரால் தங்களுடைய வீதி மற்றும் தங்களுடைய ஆலய கடமைகளுக்குரிய பகுதிகளில் இருந்து இராணுவத்தினர் அகற்றப்படாவிட்டால் வட்டுவாகல் பாலத்தில் பிரதான வீதியை மறித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆலய நிர்வாகம் மற்றும் சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோர் மீது இராணுவத்தினர் முறைப்பாடு பதிவு செய்திருக்கின்றனர்.
காவல்துறையினர் விசாரணை
இந்நிலைமையில் இன்று ஆலய தலைவரிடமும் பீற்றர் இளஞ்செழியனிடமும் முல்லைத்தீவு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த விசாரணைகளில், தங்களுடைய பாதுகாப்பு கடமைகளுக்காக ஆலய காணியை நிர்வாகத்தினுடைய சம்மதத்தோடு பெற்று தருமாறு இராணுவத்தினர் கோரியதாகவும் அதனை வழங்க முடியாது என காவல்துறையினருக்கு உறுதியாக வாக்குமூலம் வழங்கியுள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர்.
ஆலய சம்பிரதாய கடமைகளில் இராணுவத்தின் இவ்வாறான தலையீடு தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளதோடு ஆலய தீர்த்தம் எடுக்கின்ற வீதி மற்றும் பரியழம் வழி விடுகின்ற கடமைகளுக்குரிய இடங்களில் இருந்து இராணுவத்தினர் முற்று முழுதாக வெளியேற வேண்டும் எனக் கோரியுள்ளனர்.
இதேவேளை ஆலயத்தினுடைய தீர்த்த வீதி தற்போது 12 S L L I இராணுவ முகாம் வீதி என பெயர் மாற்றப்பட்டு பெயர்ப்பலகை போடப்பட்டுள்ளது. இதற்கு எதிராக பிரதேச சபையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.