கோட்டாபய பதவி விலகினால் அடுத்தது என்ன..! சட்டத்தரணிகள் சங்கம் கொடுத்த விளக்கம்
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியதன் பின்னர், புதிய அரச தலைவரை நியமிப்பது உள்ளிட்ட நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சங்கத்தின் தலைவர் அரச தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் இதனை வெளியிட்டுள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை நாடாளுமன்றம் முன்னெடுக்க வேண்டும்
தொடர்ந்து கருத்துரைத்த அவர், "அரச தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோர் பதவி விலகியதை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் நாடாளுமன்றத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டும் என அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச தலைவர் மற்றும் பிரதமர தமது பதவிகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது.
பதவி காலம் நிறைவடைவதற்கு முன்னர் அரச தலைவர் பதவி விலகுவாராயின் அவர் பதவி விலகல் தொடர்பிலான கடிதத்தை,தனது உத்தியோகப்பூர்வ கைச்சாத்திடலுடன் சபாநாயகருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
அரச தலைவர் பதவி வெற்றிடமானதை தொடர்ந்து பதில் அரச தலைவராக பிரதமர் தெரிவு செய்யப்பட வேண்டும்.பதில் அரச தலைவராக பிரதமர் பதவியேற்ற முடியாத நிலை காணப்படுமாயின் சபாநாயகர் பதில் அரச தலைவராக தெரிவு செய்யப்பட வேண்டும்.
பதில் அரச தலைவராக சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் நாடாளுமன்றத்தின் ஊடாக இடைக்கால அரச தலைவர் ஒருவர் வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட வேண்டும்.
இலங்கை அரசியல் வரலாற்றில் 1993ஆம் ஆண்டு மே மாதம் 01ஆம் திகதி அப்போதைய அரச தலைவர் ரணசிங்க பிரேமதாஸ படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அப்போதைய பிரதமர் டி.பி விஜயதுங்க ஒருசில மணித்தியாலங்களுக்குள் பதில் அரச தலைவராக நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து 1993.05.07ஆம் திகதி நாடாளுமன்றத்தின் ஊடாக இடைக்கால அரச தலைவர் தெரிவு செய்யப்பட்டார். இத்தன்மையினை தற்போது செயற்படுத்தலாம்.
பதில் அரச தலைவராக சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டு ஒருமாத காலத்திற்குள் நாடாளுமன்றத்தின் ஊடாக தகுதியான ஒருவர் இடைக்கால அரச தலைவராக தெரிவு செய்யப்பட வேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்குப்பற்றலுடனான வாக்கெடுப்பில் 50 சதவீதத்திற்கு அதிகமாக அதாவது சபாநாயகரை தவிர்த்து 224 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்குகளில் 113 வாக்குகளை பெறுபவர் இடைக்கால அரச தலைவராக தெரிவு செய்யப்பட வேண்டும்.
அரச தலைவரின் பதவி விலகல்,பதில் அரச தலைவர், இடைக்கால அரச தலைவர் தெரிவினை தாமதப்படுத்தாது துரிதமாக செயற்படுத்தும் பொறுப்பு அரசியல் கட்சி தலைவர்களுக்கு உண்டு.கட்சி தலைவர் கூட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட தீர்மானத்தை செயற்படுத்த சகல தலைவர்களும் பொது இணக்கப்பாட்டிற்கமைய செயற்பட வேண்டும்.
மக்களிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை
அரச தலைவர் மாளிகை மற்றும் அரச தலைவர் செயலகம் ஆகியவற்றை கைப்பற்றியுள்ள பொது மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். இவ்விரு கட்டடங்களும் நாட்டு மக்களின் பழமையான சொத்து, ஆகவே அவற்றிற்கு சேதம் ஏற்படுத்தாது அதன் கௌரவத்தை பாதுகாக்கும் பொறுப்பு நாட்டு மக்களுக்கு உண்டு" எனக் குறிப்பிட்டார்.
