மகிந்த பிரதமர் பதவியை துறந்தால் அடுத்த பிரதமர் யார்? புதிய பிரதமர் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை
பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்ச விலக நேரிட்டால், புதிய பிரதமராக தினேஷ் குணவர்தனவை நியமிக்குமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும், பிரதமர் மகிந்த ராஜபக்சவை பதவியில் இருந்து விலக வேண்டும் என கூறி, அரச தலைவர் கோட்டாபயவுக்கு கடிதத்தை அனுப்பிய பின்னர், பிரதமரை சந்தித்துள்ள ஆளும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், பிரதமர் பதவி விலக நேரிட்டால், அந்த பதவியை தினேஷ் குணவர்தனவுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
எது எப்படி இருந்த போதிலும் மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகினால், புதிய பிரதமராக டலஸ் அழகப்பெரும நியமிக்கப்பட வேண்டும் என விமல் வீரவங்ச தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
பழம்பெரும் அரசியல்வாதி பிலிப் குணவர்தனவின் புதல்வரான தினேஷ் குணவர்தன, நீண்டகால அரசியல் அனுபவம் கொண்டவர். அத்துடன் அவர் கடந்த காலங்களில் சிங்கள தேசியவாத கொள்கைகளின் அடிப்படையில் செயற்பட்டு வந்துள்ளார்.
தினேஷ் குணவர்தன தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி, ஆளும் பொதுஜன பெரமுனவின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.