உசுப்பேற்றும் உரைகளால் வடக்கு இளைஞர் யுவதிகளை அழித்தது போல் தெற்கிலும் தீயிட முயற்சிக்காதீர்கள்!
வடக்கில் உசுப்பேற்றும் உரைகளை நிகழ்த்தி அங்கு தமிழ் இளைஞர், யுவதிகளை அழித்தது போல் தற்போது தெற்கில் தீ வைக்க முயற்சிக்க வேண்டாம் என பொதுஜன பெரமுன கூட்டைமைப்பிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நாடாளுமன்றில் தெரிவித்த கருத்திற்கு பதிலடிகொடுக்கும் வகையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றில் அண்மையில் நடைபெற்ற ஏற்றுமதி, இறக்குமதி வரிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் யுவதிகளை அடக்குவதற்கு அரசாங்கம் அவர்களை பின்தொடர்கிறது.
தெற்கிலும் தீ வைக்க முயற்சிக்காதீர்கள்

கருத்து சுதந்திரத்துக்கு எதிராக அரசாங்கம் செயற்பட்டால் அதன் பிரதிபலனை வெகுவிரைவில் அனுபவிக்குமெனத் தெரிவித்திருந்தார்.
இதன் போது குறுக்கிட்டுக் கருத்துத் தெரிவித்த பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பஸ்குவல் மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“வடக்கில் தீ வைத்து தமிழ் இளைஞர், யுவதிகளை அழித்தது போல் தெற்கிலும் தீ வைக்க முயற்சிக்க வேண்டாம். தெற்கு மாணவர்கள் அமைதியான முறையில் கல்வி கற்பதற்கு இடமளியுங்கள்.
மேலும் மாணவர்களைத் தூண்டி விடும் வகையில் உரையாற்றி மாணவர்களை தவறாக வழிநடத்த வேண்டாம்.
மாணவர் போராட்டம் என்ற பெயரில் தீவிரவாதம்

தெற்கு மாணவர்கள் அமைதியான முறையில் கல்வி கற்பதற்கு இடமளியுங்கள். அதனை விடுத்து மாணவர்களை தூண்டி விட்டு அவர்களின் எதிர்காலத்தை நாசமாக்க வேண்டாம்.
நீங்கள் கல்வி கற்கும் காலத்தில் போராட்டத்தில் ஈடு படவில்லை. மாணவர்களை சிறைக்கு அனுப்பும் வகையில் நிலைமைகளை தோற்றுவிக்க வேண்டாம்.
அதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
உங்களின் சந்ததியினர் வடக்கில் இதனையே செய்தார்கள். மாணவர் போராட்டம் என்ற பெயரில் கடந்த காலங்களில் நாட்டில் தீவிரவாத செயற்பாடுகளே இடம்பெற்றன. எனவே தெற்கிற்கு தீ வைக்காதீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.