பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பை விடுத்துள்ள காவல்துறை- இலட்சக் கணக்கில் சன்மானம்!
கொழும்பு புறநகர் பகுதியான பாணாந்துறையில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தொடர்பில் காவல்துறையினர் அறிவிப்பொன்றை விடுத்துள்ளனர்.
அதனடிப்படையில், சந்தேக நபர்கள் இருவரின் இருப்பிடம் தொடர்பிலும் உரிய தகவல்களை வழங்குவோருக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படுமென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பாணந்துறையில் கடந்த 27ஆம் திகதி வியாழக்கிழமை இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 சந்தேக நபர்கள் பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அருகில் அம்புயூலன்ஸ் வண்டியின் சாரதி மீது துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தொடர்பில் பாணந்துறை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையில், தனிப்பட்ட விசாரணைகளை அடுத்து சந்தேக நபர்கள் இருவரை அடையாளம் கண்டுபிடித்துள்ளனர்.
எனவே இரண்டு சந்தேக நபர்களின் இருப்பிடத்தை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை காவல்துறையினர் நாடியுள்ளதுடன், இது தொடர்பாக ரொக்கப் பரிசும் அறிவித்திருந்தனர்.
சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் 071 8592686 அல்லது 071 8592745 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக காவல்துறையினருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
