கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டத்தில் என்றுமில்லாத வகையில் அமைந்திருந்த மஹிந்தவின் செயற்பாடு!
சிறிலங்கா ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளது.
அதன் போது பிரதமர் வேறு நாட்களில் செய்யாத விசேட காரியம் ஒன்றை செய்துள்ளார். வழமையாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தலைமை ஆசனத்தில் பிரதமர் அமர்ந்திருப்பார் என்பதுடன் சபை முதல்வர் தினேஷ் குணவர்தன, ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோரும் அமர்ந்திருப்பார்கள்.
எனினும் புதிய ஆண்டில் நடைபெற்ற ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் பிரதமர் பிரதான மேசைக்கு மேலும் மூன்று பேரை அழைத்திருந்தார்.
அமைச்சர்கள் ஜீ.எல்.பீரிஸ், நிமல் சிறிபால டி சில்வா மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரை அழைத்து அமர வைத்திருந்தார். அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சி, எந்த நேரத்திலும் அரசாங்கத்தில் இருந்து விலக தயாராகியுள்ளதுடன் அரசாங்கத்தை விமர்சித்து வருகிறது.
சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் இருந்த போதும், ஆளும் கட்சியின் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
அத்துடன் விமல் வீரவன்ச உள்ளிட்டோர் தலைமையிலான ஆளும் கட்சி கூட்டணியில் இருக்கும் 11 கட்சிகள் தாம் அங்கம் வகிக்கும் அரசாங்கத்திற்கு எதிரான வழக்கொன்றிலும் சம்பந்தப்பட்டுள்ளன.
