நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மானிய விலையில் எரிபொருள்- குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர்!
சிறிலங்கா நாடாளுமன்ற வாரத்தில் நாடாளுமன்றுக்கு செல்லும் உறுப்பினர்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள வழிவகைகளை ஏற்படுத்தி தருவது தொடர்பில் அண்மையில் சபாநாயகரினால் காவல்துறைமா அதிபரிடம் கோரிக்கையொன்று விடுக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் போக்குவரத்து காவல்துறையினருக்கான எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் காவல்துறை தரிப்பிடங்களில் உள்ள எரிபொருள் நிலையங்கள் ஊடாக வெளி நபர் எவருக்கும் எரிபொருள் வழங்கப்படுவதில்லை. காவல்துறை அதிகாரிகளுக்கு மாத்திரமே பணம் அறவிடாமல் லீற்றர் அடிப்படையில் நாரஹேப்பிட்டி காவல்துறை நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்கப்படுகிறது.
எனினும் காவல்துறைமா அதிபரிடம் சபாநாயகர் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் வழங்கப்படுகின்றது.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மானிய அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் தொடர்பில் இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சலுகை விலையில் எரிபொருள் வழங்கப்படமாட்டாதென தெரிவித்துள்ளார்.
ஆனால் சமூகத்தில் தவறான கருத்தொன்று பரவி வருகிறது. இது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்துவதாக உள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சந்தை விலைக்கு குறைவான விலையில் எரிபொருள் வழங்கப்படுவதில்லை. வழங்கப்போவதும் இல்லை.
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் கட்டணம் செலுத்தியே குறித்த எரிபொருள் காவல்துறையினரால் பெறப்படுகிறது. சபாநாயகர் காவல்துறைமா அதிபரிடம் முன்வைத்த கோரிக்கையையடுத்து, காவல்துறைமா அதிபர் கேட்டுக்கொண்டதற்கிணங்க சந்தை விலையில், கட்டணம் அறவிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் வழங்க அவர்களுக்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எழுத்துமூல அனுமதி வழங்கியது.
சந்தையில் பெற்றோல் 334 ரூபாவுக்கும், ஒட்டோ டீசல் 289 ரூபாவுக்கு வழங்கப்படுகிறது. நிரப்பு நிலையங்களில் அத்தியாவசிய சேவை வாகனங்களை தவிர ஏனைய வாகனங்களுக்கு ஆகக்கூடியது 8000 ரூபாவுக்கே எரிபொருள் வழங்கப்படுகிறது.
அத்துடன், ஏனைய வாகனங்களுக்கான எரிபொருள் வழங்கல் வரம்பும் நடைமுறையில் உள்ளது. காவல்துறையினரும் அதற்கு ஏற்றவாறே ஏனையோருக்கு எரிபொருள் வழங்கியிருக்க வேண்டும். எனினும், காவல்துறை தரிப்பிடத்தில் பாரிய தவறு இழைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களாக குறித்த எரிபொருள் பம்பியில் கட்டணங்கள் இற்றைப்படுத்தப்பட்டிருக்கவில்லை. அதில், 121 ரூபா எரிபொருள் கட்டணமாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, உடனடியாக எரிபொருள் வழங்கலை நிறுத்துமாறு நாம் அவர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளோம்.
இவ்வாறு கட்டணங்கள் இற்றைப்படுத்தாமை தொடர்பில் உடனடியாக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, அரச தலைவர், பிரதமர் மற்றும் ஏனைய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் என எவராக இருந்தாலும், அவர்களுக்கு மானிய விலையில் ஒருபோதும் எரிபொருள் வழங்கப்படமாட்டாதென அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
